உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வை 534 பேர் எழுதினர் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தகவல்


உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வை 534 பேர் எழுதினர் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2018 1:59 AM IST (Updated: 10 Jun 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

உரிமையியல் நீதிபதி பதவிக்கு 534 பேர் தேர்வு எழுதினர், என்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான போட்டித்தேர்வு சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், முருகன், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக்குழு உறுப்பினர் வக்கீல் பாலுசாமி, கலெக்டர் ரோகிணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. சேலத்தில் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த தேர்வு நடைபெற்றது.

24 பேர் வரவில்லை

தேர்வு எழுத வசதியாக 28 அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து இந்த தேர்வு எழுத 558 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 534 பேர் தேர்வு எழுதினர். 24 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையத்தில் ஒரு அறைக்கு தலா 2 சி.சி.டி.வி. கேமரா வீதம் 56 சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்பட்டு, தேர்வு முழுமையாக பதிவு செய்யப்பட்டது.

தேர்வு முடிந்த பின்பு விடைத்தாள் அனைத்தும் நீதிபதிகள் முன்னிலையில் ‘சீல்‘ வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

அப்போது சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி கிரிஸ்டோபர், மகளிர் கோர்ட்டு மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், தாசில்தார் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story