கிருஷ்ணகிரி அணையில் தற்காலிக ஷட்டர் அகற்றும் பணி தீவிரம்


கிருஷ்ணகிரி அணையில் தற்காலிக ஷட்டர் அகற்றும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 9 Jun 2018 11:00 PM GMT (Updated: 9 Jun 2018 9:06 PM GMT)

கிருஷ்ணகிரி அணையின் தற்காலிக ஷட்டர் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகில் உள்ள முதல் ஷட்டர் கடந்த நவம்பர் மாதம் உடைந்தது. இதையடுத்து தற்காலிகமாக அங்கு ஷட்டர் அமைக்கப்பட்டது. தற்போது அங்கு புதிய ஷட்டர் அமைப்பதற்காக தளவாட பொருட்கள் கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் புதிய ஷட்டர் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.

இதற்காக முதல் கட்டமாக தற்காலிகமாக பொருத்தப்பட்டுள்ள ஷட்டரை கியாஸ் வெல்டிங் மூலமாக அகற்றும் பணி தொடங்கியது. நேற்று 2-வது நாளாக தற்காலிக ஷட்டர் அகற்றும் பணி நடந்தது. இரவு, பகலாக இந்த பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தற்காலிக ஷட்டர் அகற்றும் பணிக்காக அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

அணையின் நீர்மட்டம் 30 அடியாக குறைத்தால் தான் பணிகள் மேற்கொள்ள முடியும் என்பதால் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் அணையில் இருந்து 2,064 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் குறைந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது குறைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணையின் நேற்றைய நீர்மட்டம் 30.30 அடியாகும். அணைக்கு நேற்று வினாடிக்கு 1,050 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1,204 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் முதல் மதகில் உள்ள ஷட்டர் உடைந்ததின் காரணமாக அணையின் நீர்மட்டம் 44 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story