துணை முதல்–மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி: ராகுல்காந்தியை சந்தித்து எம்.பி.பட்டீல் ஆலோசனை
துணை முதல்–மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ள எம்.பி.பட்டீல் டெல்லியில் நேற்று ராகுல்காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
துணை முதல்–மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ள எம்.பி.பட்டீல் டெல்லியில் நேற்று ராகுல்காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுப்பதாக எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
எம்.பி.பட்டீல் போர்க்கொடிகர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்–மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்–மந்திரியாக பரமேஸ்வரும் இருந்து வருகிறார்கள். மேலும் கடந்த 6–ந் தேதி மந்திரிசபை விரிவாக்கத்தின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 10 பேரும் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் 6 மந்திரி பதவிகளும், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ஒரு மந்திரி பதவியும் காலியாக உள்ளது.
இந்த நிலையில், மந்திரி பதவி கிடைக்காததால் எம்.பி.பட்டீல், சதீஸ் ஜார்கிகோளி, எச்.கே.பட்டீல், எம்.டி.பி.நாகராஜ் உள்ளிட்ட 20–க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவ்வாறு அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் எம்.பி.பட்டீல் மற்றும் சதீஸ் ஜார்கிகோளி வீட்டில் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். அதே நேரத்தில் எம்.பி.பட்டீல் துணை முதல்–மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளார். மேலும் தனக்கு ஆதரவாக 20 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும் எம்.பி.பட்டீல் தெரிவித்தார்.
ராகுல்காந்தியுடன் ஆலோசனைஇதையடுத்து, எம்.பி.பட்டீலை நேற்று முன்தினம் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர், கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரி கிருஷ்ணபைரே கவுடா ஆகியோர் சந்தித்து சமாதானப்படுத்த முயன்றார்கள். அதே போல் முதல்–மந்திரி குமாரசாமியும் எம்.பி.பட்டீலை சந்தித்து பேசினார். ஆனால் எம்.பி.பட்டீலை சமாதானப்படுத்தும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அவர் தனக்கு துணை முதல்–மந்திரி பதவி கொடுத்தே தீர வேண்டும் என்று அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, எம்.பி.பட்டீலுடன் பேச்சுவார்த்தை நடத்த, அவரை டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது. உடனே நேற்று முன்தினம் எம்.பி.பட்டீல் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில், நேற்று மதியம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி.பட்டீல் சந்தித்து பேசினார். அவருடன் கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவரான அகமது பட்டேலுடன் ராகுல்காந்தி வீட்டிற்கு எம்.பி.பட்டீல் சென்றார். அங்கு ராகுல்காந்தியுடன் எம்.பி.பட்டீல் ஆலோசனை நடத்தினார்.
துணை முதல்–மந்திரி பதவிஅப்போது தான் கடந்த 5 ஆண்டுகளாக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக சிறப்பாக பணியாற்றியதாகவும், தற்போது தனக்கு மந்திரி பதவி வழங்கப்படாமல் புறக்கணித்திருப்பதாகவும், தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை, அப்படி இருந்தும் மந்திரி பதவி கிடைக்கவில்லை என்று ராகுல்காந்தியிடம் எம்.பி.பட்டீல் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, எம்.பி.பட்டீலை சமாதானப்படுத்திய ராகுல்காந்தி, அடுத்தகட்டமாக மந்திரிசபை விரிவாக்கம் செய்யும் போது கண்டிப்பதாக மந்திரி பதவி வழங்குவதாகவும், இல்லையெனில் கட்சியில் உரிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் சொல்லியதாக கூறப்படுகிறது. அதனை ஏற்க எம்.பி.பட்டீல் மறுத்து விட்டதாக தெரிகிறது.
லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தனக்கு துணை முதல்–மந்திரி பதவி கட்டாயம் வழங்க வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் திட்டவட்டமாக தெரிவித்ததுடன், லிங்காயத் சமூகத்தை புறக்கணித்தால் அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடகர்நாடகத்தில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் எம்.பி.பட்டீல் கூறியதாக தெரிகிறது. பின்னர் ராகுல்காந்தி வீட்டில் இருந்து அவர் வெளியே புறப்பட்டு வந்தார். இதனால் ராகுல்காந்தியுடன் எம்.பி.பட்டீல் நடத்திய ஆலோசனையும் தோல்வி முடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகுல்காந்தியை சந்தித்துவிட்டு வெளியே வந்த எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:–
எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து...கர்நாடகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விளக்கமாக ராகுல்காந்தியிடம் எடுத்து கூறினேன். என்னுடைய நிலை பற்றியும் மற்ற எம்.எல்.ஏ.க்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது குறித்தும் ராகுல்காந்தியிடம் தெரிவித்தேன். எனக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்றோ, துணை முதல்–மந்திரி பதவி வேண்டும் என்றோ, மாநில தலைவர் பதவி வேண்டும் என்றோ ராகுல்காந்தியிடம் எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை. நான் ஒரு தனி ஆள் அல்ல. என்னுடன் நண்பர்களான சதீஸ் ஜார்கிகோளி, எம்.டி.பி.நாகராஜ் உள்ளிட்ட 15–க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
எம்.எல்.ஏ.க்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்து ராகுல்காந்தியிடம் கூறியுள்ளேன். அதுபோல, ராகுல்காந்தியிடம் நான் பேசியது, அதற்கு அவர் கொடுத்த விளக்கம் உள்ளிட்ட அனைத்து தகவல் குறித்து பெங்களூருவுக்கு சென்று மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதன்பிறகு, அடுத்தகட்ட என்ன செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இது காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினை. இதனை 4 சுவர்களுக்கு பேசி முடிக்க வேண்டும். எந்தவொரு விஷயத்தையும் பகிரங்கமாக தெரிவிக்க முடியாது. மல்லிகார்ஜுன கார்கே மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை.
இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.