தமிழகத்தில் தற்போது இரட்டை ஆட்சி முறை நடக்கிறது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


தமிழகத்தில் தற்போது இரட்டை ஆட்சி முறை நடக்கிறது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x
தினத்தந்தி 9 Jun 2018 10:45 PM GMT (Updated: 9 Jun 2018 9:18 PM GMT)

தமிழகத்தில் தற்போது இரட்டை ஆட்சி முறை நடக்கிறது என்று தர்மபுரியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சியின் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், மாவட்ட துணைச்செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.முரளி, வக்கீல் அணி நிர்வாகி ஆ.மணி, ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், கோபால், குமரவேல், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தங்கராஜ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. உயர்நிலைசெயல் திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க.தலைவர் கருணாநிதி ஒருமுறைகூட தோல்வியை சந்திக்கவில்லை. நாட்டில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தேர்தலில் தோல்வி அடைகிறார்கள். ஆனால் தி.மு.க. தலைவர் மட்டுமே அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடிஉள்ளார். தமிழகத்தில் தற்போது இரட்டை ஆட்சி முறை நடக்கிறது. கவர்னர் ஒருபுறம் ஆய்வு செய்கிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் ஆய்வு செய்கிறார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

தமிழ்மொழியை நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக கொண்டு வரவேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடி தமிழ்மொழியை பழமையான மொழி என்று பாராட்டி பேசிஉள்ளார். ஆனால் உள்நாட்டு விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் இல்லை. மற்ற வெளிநாட்டு விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் உள்ளது. இதுபற்றி எதுவும் தெரியாத எடப்பாடி பழனிசாமி அரசு மக்களை பற்றி சிந்திப்பதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு தொழில்கள் அழிந்து போய்விட்டது. இதுபற்றி தமிழக அரசு கண்டுகொள்ள வில்லை. தர்மபுரி மாவட்டத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் தி.மு.க. 5 தொகுதிகளிலும் வெற்றிபெறும். இதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இப்போதிருந்தே தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், மாநில தீர்மானகுழு உறுப்பினர் விஸ்வநாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டிமுருகேசன், மாவட்ட சார்பு அமைப்பு நிர்வாகிகள் முருகன், பொன்மகேஸ்வரன், சந்திரமோகன், தங்கமணி, டாக்டர் பிரபு ராஜசேகர், அன்பழகன் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தர்மபுரி ஒன்றிய செயலாளர் சேட்டு நன்றி கூறினார். 

Next Story