ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த மேல்–சபை உறுப்பினர் மாரடைப்பால் மரணம் தேவேகவுடா, குமாரசாமி அஞ்சலி செலுத்தினர்
ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மேல்–சபை உறுப்பினரான சையத் முதீர்அகா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
பெங்களூரு,
ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மேல்–சபை உறுப்பினரான சையத் முதீர்அகா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு தேவேகவுடா, குமாரசாமி அஞ்சலி செலுத்தினார்கள்.
மேல்–சபை உறுப்பினர் மரணம்கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் தொட்ட மசூதி கிராமத்தை சேர்ந்தவர் சையத் முதீர்அகா என்ற அப்சர் அகா. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர், அக்கட்சி சார்பில் கர்நாடக மேல்–சபை உறுப்பினராகவும் இருந்து வந்தார். கடந்த 2012–ம் ஆண்டு ஜூன் மாதம் 18–ந் தேதி சையத் முதீர்அகா மேல்–சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். கடந்த 3 மாதங்களாக சையத் முதீர்அகா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சையத் முதீர்அகா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் சையத் முதீர்அகா மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் உயிர் இழந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தேவேகவுடா, குமாரசாமி அஞ்சலிபின்னர் அவரது உடல் பெங்களூருவில் இருந்து ராமநகர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சையத் முதீர் அகாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள், ராமநகர் மாவட்ட மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அதுபோல, ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரான தேவேகவுடா, மாநில தலைவரும், முதல்–மந்திரியுமான குமாரசாமி ஆகியோர் நேற்று மாலையில் ராமநகர் மாவட்டத்திற்கு சென்று சையத் முதீர்அகாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
பின்னர் முதல்–மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில், “சையத் முதீர்அகா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் மாரடைப்பால் உயிர் இழந்துவிட்டதை கேள்விப்பட்டு நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக அவர் இருந்தார். அவரது மரணம், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு பெரும் இழப்பாகும். சையத் முதீர்அகா இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்“ என்றார்.
அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்அதைத்தொடர்ந்து, நேற்று மாலையில் சையத் முதீர் அகாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில், ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். சையத் முதீர் அகாவின் சொந்த கிராமத்திலேயே, அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மாரடைப்பால் மரணமடைந்த சையத் முதீர்அகாவுக்கு 67 வயதாகிறது. அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.