ரெயில் நிலையத்தில் ‘டிக்கெட்’ கேட்டு வாலிபரை தாக்கிய பெண் டிக்கெட் பரிசோதகர்


ரெயில் நிலையத்தில் ‘டிக்கெட்’ கேட்டு வாலிபரை தாக்கிய பெண் டிக்கெட் பரிசோதகர்
x
தினத்தந்தி 9 Jun 2018 11:15 PM GMT (Updated: 9 Jun 2018 9:26 PM GMT)

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் டிக்கெட் கேட்டு வாலிபரை பெண் டிக்கெட் பரிசோதகர் தாக்கினார். இருவரும் போலீசில் புகார் தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நேற்று பெண் டிக்கெட் பரிசோதகர் நெஹல் குமாரி வரு (வயது 32) பணியில் இருந்தார். நடைமேடையில் நடந்து வந்துகொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து டிக்கெட் கேட்டார்.

அந்த வாலிபர், டிக்கெட்டா? கொஞ்சம் இருங்க... எங்க அப்பாகிட்ட இருக்கு... வாங்கிட்டு வரேன்...’, என்று கூறி வேகமாக புறப்பட்டார். இதையடுத்து அந்த பெண் டிக்கெட் பரிசோதகர் அந்த வாலிபரை மீண்டும் மடக்கி போகவிடாமல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட முயல, பெண் டிக்கெட் பரிசோதகர் வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்தார். இதில் வாலிபரின் சட்டை கிழிந்தது.

இதையடுத்து யாரும் எதிர்பாராதவிதமாக அந்த வாலிபர் ஆக்ரோஷமாக கத்தினார். இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். சட்டை கிழிந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண் டிக்கெட் பரிசோதகரிடம் கோபமாக முறையிட்டார்.

இதைப்பார்த்த அங்கிருந்த இன்னொரு பெண் டிக்கெட் பரிசோதகர்கள் சிமிலால் உள்பட சிலர் அந்த வாலிபரை மடக்கி நைய புடைத்தனர். இதில் வாலிபருக்கு காயம் ஏற்பட்டது. ரத்தமும் வடிந்தது. வாலிபரின் அலறலை கேட்டு அவரது பெற்றோர் பதற்றத்துடன் ஓடோடி வந்து, கூட்டத்தில் இருந்து அவரை மீட்டனர். ‘விடுங்கய்யா... பாவம் அவன் மனநிலை சரியில்லாதவன்யா’, என்ற வாலிபரின் தந்தை குரல் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து அடிபட்ட வாலிபருடன் அவரது பெற்றோர் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வந்து, பெண் டிக்கெட் பரிசோதகர் தாக்கியதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் அடிபட்ட வாலிபர் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டை சேர்ந்த டீனு (26) என்பதும், பட்டதாரியான இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதற்கிடையில் பெண் டிக்கெட் பரிசோதகர் நெஹல் குமாரி வருவும் எழும்பூர் ரெயில் நிலையம் வந்து போலீசில் புகார் செய்தார். பணியில் இருந்த தன்னை டீனு தாக்கியதாகவும், உள்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் புகார் அளித்தார். இருவரது புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து டீனுவை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதேவேளை நெஹல் குமாரி வருவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

தமிழகத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர் உள்பட பணியிடங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தமிழ் மொழி தெரியாததால் இங்குள்ள பயணிகளிடம் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. அப்படி நடந்த ஒரு வாக்குவாதத்தில் தான் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இதில் தானும் தாக்கப்பட்டதாக ஆஸ்பத்திரியில் அனுமதியான பெண் டிக்கெட் பரிசோதகர் நெஹல் குமாரி வரு ஏற்கனவே பல பயணிகளிடம் மொழி தெரியாமல் வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. என்னதான் ஆனாலும் டிக்கெட் கேட்டு பயணியின் சட்டையை பிடித்து இழுப்பதா? என்று பெண் டிக்கெட் பரிசோதகருக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story