கடன் தருவதாக கூறி பெண்களிடம் ரூ.50 லட்சம் மோசடி


கடன் தருவதாக கூறி பெண்களிடம் ரூ.50 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 10 Jun 2018 3:30 AM IST (Updated: 10 Jun 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

அனகாபுத்தூரில் கடன் தருவதாக கூறி பெண்களிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த வாலிபரை, பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 41). இவருடைய உறவினர் ரகுராமன்(35). இவர்கள் இருவரும், பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் தேவராஜ் நகரில், சுயதொழில் செய்யும் மகளிர்களுக்கு அரசு மானியத்துடன், வட்டி இல்லாத கடன் வாங்கி தருவதாக கூறி, அலுவலகம் நடத்தி வந்தனர்.

இங்கு உறுப்பினராக சேர்ந்தால் 3 மாதத்தில் கடன் தொகையான ரூ.1 லட்சம் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்தனர். இதற்கான உறுப்பினர் விண்ணப்பத்தை ரூ.200-க்கு விற்பனை செய்தனர். ஆரம்பத்தில் ஒரு சிலர் ரூ.200 செலுத்தி உறுப்பினராக சேர்ந்தனர். அவர்களுக்கு கடன் வழங்கப்பட்டது.

இதை நம்பி பம்மல், நாகல்கேணி, அனகாபுத்தூர், பொழிச்சலூர் பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ரூ.200 செலுத்தி உறுப்பினராக சேர்ந்தனர். சிலர் 10, 20 விண்ணப்பங்களை ஒரே பெயரில் பூர்த்தி செய்து, பணம் செலுத்தினர். ஆனால், யாருக்கும் கடன் வழங்கப்படவில்லை.

இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக அலுவலகத்தை பூட்டி விட்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர். அதன்பிறகுதான் அவர்கள் மோசடி பேர்வழிகள் என்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது.

இவ்வாறு விண்ணப்ப கட்டணமாக பெற்றதில் பொதுமக்களிடம் இருந்து அவர்கள் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், சங்கர்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்தநிலையில், மோசடி செய்த இருவரில் தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை பாதிக்கப்பட்ட பொதுமக்களே பிடித்து தர்மஅடி கொடுத்து நேற்று முன்தினம் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான ரகுராமனை, சங்கர் நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story