2-வது நாளாக பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை


2-வது நாளாக பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2018 10:49 PM GMT (Updated: 9 Jun 2018 10:49 PM GMT)

2-வது நாளாக பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்து உள்ளது.

மும்பை, 

2-வது நாளாக பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்து உள்ளது.

பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மராட்டியத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஒரு பகுதியினர் சம்பள உயர்வு கோரி நேற்றுமுன்தினம் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கியது.

இதன் காரணமாக அரசு பஸ்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு உள்ளானார்கள்.

2-வது நாளாக நீடித்தது

அதே நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர். டிரைவர்கள் பஸ்களை இயக்கினார்கள். பஸ்களை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு நாந்தெட் பகுதியில் 2 அரசு பஸ்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்கள் சேதம் அடைந்தன.

இந்தநிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் நேற்று 2-வது நாளாகவும் பணியை புறக்கணித்தனர்.

எச்சரிக்கை

இந்தநிலையில், நேற்று முன்தினத்தை விட நேற்று மாநிலம் முழுவதும் அதிகளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இதன் காரணமாக பஸ் போக்குவரத்தில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துகழகம் எச்சரித்து உள்ளது.

Next Story