போலீஸ் குடியிருப்பில் புகுந்து திருடிய வாலிபர் கைது போலீஸ்காரர் விரட்டி பிடித்தார்


போலீஸ் குடியிருப்பில் புகுந்து திருடிய வாலிபர் கைது போலீஸ்காரர் விரட்டி பிடித்தார்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:52 PM GMT (Updated: 9 Jun 2018 10:52 PM GMT)

போலீஸ் குடியிருப்பில் புகுந்து திருடிய வாலிபரை போலீஸ்காரர் விரட்டி பிடித்தார்.

மும்பை, 

போலீஸ் குடியிருப்பில் புகுந்து திருடிய வாலிபரை போலீஸ்காரர் விரட்டி பிடித்தார்.

வாலிபர் ஓட்டம்

மும்பை காலாசவுக்கி பகுதியில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. சம்பவத்தன்று, இந்த போலீஸ் குடியிருப்பில் இருந்து வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக வெளியே சென்று கொண்டிருந்தார். இதை அங்கு வசித்து வரும் போலீஸ்காரர் விஜய் ராசம் மற்றும் அவரது சகோதரர் சிங் ஆகியோர் கவனித்தனர்.

இருவரையும் பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த இருவரும் அந்த வாலிபரை விரட்டிச்சென்றனர். காட்டன்கிரீன் ரெயில் நிலையம் அருகில் வைத்து அவரை மடக்கி பிடித்தனர்.

திருட்டு

அவரிடம் போலீஸ்காரர் விஜய் ராசம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் கமல்ஜித் சிங் (வயது20) என்பதும், அவர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் சிவ்ரி போலீஸ் நிலைய போலீஸ்காரர் விஜய் பானே என்பவரது வீட்டில் 60 கிராம் தங்கம், ரூ.2,800 திருடி இருந்ததும் தெரியவந்தது.

மேலும் ஆயுதப்படை போலீசில் இருக்கும் ராகினி ஜக்தாலே என்பவரது வீட்டில் புகுந்ததாகவும், ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். இதையடுத்து அந்த வாலிபர் காலாசவுக்கி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.

இதில், அவர் ஏற்கனவே கடந்த ஆண்டு பயங்கரவாத தடுப்பு படை போலீஸ்காரர் வீட்டில் புகுந்து சர்வீஸ் துப்பாக்கியை திருடியதாக அம்போலி போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story