முகநூலில் பிரபலமாகும் பெண் முகம்


முகநூலில் பிரபலமாகும் பெண் முகம்
x
தினத்தந்தி 10 Jun 2018 1:47 PM IST (Updated: 10 Jun 2018 1:47 PM IST)
t-max-icont-min-icon

முகநூலில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் பெண்களில் ஒருவர், ஜின்ஷா பஷீர். இவர் நான்கு மாதங்களில் பேஸ்புக்கிலும், யூடியூப்பிலும் 70 வீடியோக்களை ‘போஸ்ட்’ செய்திருக்கிறார்.

ஜின்ஷா பஷீரிடம் ‘பேஸ்புக் மூலம் மற்றவர்களுக்கு உதவமுடியுமா?’ என்று கேட்டால், “நிச்சயமாக உதவ முடியும். அதுமட்டுமின்றி நம் கண் முன்னே நடக்கும் விஷயங்கள் பற்றி நமது கருத்துக்களையும் சொல்ல முடியும்” என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார். இவர் சமூக பிரச்சினைகளில் தனது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து வருகிறார்.

“என் கண்முன்னால் நடக்கும் சம்பவங்கள் பற்றி கருத்துச் சொல்லவும், தட்டிக் கேட்கவும் நான் சிறுவயதில் இருந்தே தயங்கியதில்லை. யாராக இருந்தாலும் அவர்கள் முன்னால் என் கருத்தை எடுத்துச் சொல்லும் தைரியமும் என்னிடம் இருந்தது. ஒருமுறை பெட்ரோல் பங்க் ஒன்றில் அளவில் மோசடி செய்வது என் கவனத்திற்கு வந்தது. அதை பற்றி நான் கேள்வி எழுப்பியபோதுதான் அந்த பகுதியில் அனேக பங்க்களில் அந்த மோசடி நடப்பதை அறிந்தேன். அதை எல்லாம் தொகுத்து ஒரு வீடியோ தயார் செய்து பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். அதற்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட லைக் கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது. பின்பு நான் உருவாக்கிய சில வீடியோக்களும் ஹிட்டானதால், ஒரு மாதத்திற்குள் என் பக்கத்தை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்தார்கள். நான்கு மாதத்திற்குள் 70-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்தேன். தற்போது இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் என் பேஜை பின் தொடர்கிறார்கள்” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்.

பேஸ்புக்கை இவர் கையாளும் அனுபவம் வித்தியாசமானதாகவே இருக்கிறது. புதிய வீடியோவை போஸ்ட் செய்த முதல் நாள் கமெண்ட் பாக்சை திறந்து படிக்க ரொம்ப தைரியம் வேண்டுமாம். ‘பெண்ணே உனக்கு வேறு வேலையே இல்லையா..’, ‘அடக்கஒடுக்கமாக இருந்து வீட்டு வேலையை பார்..’ என்பதுபோல் வருமாம். சிலர் கண்டபடி விமர்சித்திருப்பார்களாம்!

“என்னை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நான் கூறியிருக்கும் கருத்தில் கவனம் செலுத்தாமல், வீடியோவில் நான் புல்லட் ஓட்டுவதை பற்றி பேசுகிறார்கள். நான் ஒரு பெண்ணாக இருப்பதால் அதை ஒரு குற்றம்போல் பார்க்கிறார்கள். ‘இங்கே கருத்துக்கள் சொல்ல ஆண்கள் இருக்கிறார்கள். பெண்கள் எதை பற்றியும் பேச வேண்டாம்’ என்று நினைப்பவர்களிடம் என்ன சொல்வது. வெளிநாட்டில் உயர்ந்த அந்தஸ்தில் வேலை செய்யும் ஒருவர் வீடியோவை பார்த்துவிட்டு, பேஸ்புக்கில் வெளியே சொல்லமுடியாத அளவுக்கு என்னை விமர்சித்தார். நிலைமை எல்லைமீறிப்போனதால் நான் மெசேஜ்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து என் பேஜில் போஸ்ட் செய்தேன். அதோடு அந்த தொல்லை முடிவுக்கு வந்தது.

நான் போஸ்ட் செய்யும் வீடியோக்களை பார்த்துவிட்டு கேலி, கிண்டல் செய்பவர் களால் குடும்பத்தில் பலரும் வேதனையடைந்து, ‘இதெல்லாம் உனக்கு தேவையா?’ என்று கேட்டார்கள். அவர்கள் அந்த அளவுக்கு மனம்நொந்து போனார்கள். ஆனாலும் எனது தந்தையும், கணவரும் பக்கபலமாக இருக்கிறார்கள். அதனால்தான் என்னால் தொடர்ந்து இதை செய்துகொண்டிருக்க முடிகிறது” என்கிறார், ஜின்ஷா.

இவரது தந்தை பஷீர் ராணுவத்தில் பணிபுரிந்தவர். அவர் தன் மகள் எந்த விதத்திலும் தோற்றுப்போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ‘நீ செய்து கொண்டிருப்பது சரியானதுதான் என்று நீ கருதினால், எத்தனை தடைகள் வந்தாலும், எவ்வளவு கேலிகள் தோன்றினாலும் அதில் இருந்து பின்வாங்காமல் முன்னோக்கி செல்..’ என்று மகளிடம் கூறியிருக்கிறார். ‘உனக்கு பிடித்த செயல்களை நீ செய். அது எதுவாக இருந்தாலும் உன்னோடு நான் இருப்பேன்’ என்று ஜின்ஷாவின் கணவர் பைசல் கூறியிருக்கிறார்.

ஜின்ஷா என்ஜினீயரிங் படித்துவிட்டு சிறிது காலம் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்திருக் கிறார். அந்த வேலையில் இருந்து ஜின்ஷா விலக விரும்பியபோதும், அதற்கு பைசல் தடையாக இருந் திருக்கவில்லை. ஜின்ஷா தோன்றும் வீடியோக்களை தயார் செய்யும் கேமரா பணிகளையும் பைசலே கவனித்துக்கொள்கிறார். பைசலின் பெற்றோரும் மரு மகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். முன்பு இவரது வீடியோக்களை பார்த்துவிட்டு விமர்சித்தவர்களும் இப்போது பாராட்டுகிறார்கள். அவர்களும் புதிய பிரச்சினைகளை ஜின்ஷாவின் கவனத்துக்கு கொண்டு வந்து வீடியோவாக்கும்படி கூறுகிறார்கள். பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ெபாது இடங்களில் ஜின்ஷா செல்லும்போது அவரோடு நின்று செல்பி எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

ஜின்ஷாவின் வீடியோக்களால் மறுவாழ்வு பெற்றவர்கள் பலர் உண்டு. வெளிநாட்டில் வேலைக்கு சென்ற 25- வது நாளில் விபத்தில் சிக்கி ஷான் ஷாகுல் என்ற இளைஞர் மரணமடைந்தார். அவரது குடும்பத்தின் சோகத்தை வீடியோவாக்கினார். அது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சவுதி அரேபியாவில் உள்ள அல் கசீம் என்ற குழுவினர் ஷான் ஷாகுல் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் வழங்கினார்கள். பின்பு ஆயிஷா என்ற ஒரு வயது குழந்தைக்கு மஜ்ஜை மாற்று ஆபரேஷன் செய்வதற்காக வீடியோ போஸ்ட் செய்தார். ஒரே மாதத்தில் சிகிச்சைக்கு தேவையான 30 லட்சம் ரூபாய், அந்த குழந்தையின் குடும்பத்திற்கு கிடைத்தது.

“நான் நல்ல காரியம் செய்துகொண்டிருக்கிறேன் என்பதை எல்லோரும் உணர்ந்துவிட்டார்கள். அதுதான் என்னை மென்மேலும் வீடியோ உருவாக்க தூண்டுகிறது. கோழிக்கோட்டை சேர்ந்த முனீர் என்பவர் திருமண வயதை அடைந்த 3 மகள்களோடு சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு வீடு கட்டவும், அவரது மகள்களை வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொள்ளவும் வேண்டி வீடியோ உருவாக்கினேன். அதன் மூலம் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடந்துவிட்டது. இரண்டாவது பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. முனீர் வீடு கட்டவும் ரூ. 4 லட்சம் வசூலாகியிருக்கிறது. மக்கள் தங்கள் பிரச்சினையை எளிதாக தீர்க்க என்னை அணுகுகிறார்கள்.

வீடியோ ப்ளாக்கிங் செய்வது என் வேலை. ஜின்ஷா பஷீர் என்ற பெயரில் எனக்கு ஒரு யூடியூப் சேனல் இருக்கிறது. பேஸ்புக்கில் போஸ்ட் செய்த அனைத்து வீடியோக்களையும் யூடியூப்பிலும் அப்லோட் செய்கிறேன். அதன் மூலம் எனக்கு வருமானம் கிடைக்கிறது. வீடியோ போஸ்ட் செய்யும்போது அதோடு எனது ப்ளாக்கின் லிங்கையும் சேர்த்திடுவேன். ப்ளாக்கில் நிறைய பேர் வரும்போது அதில் சேரும் விளம்பரங்கள் மூலமும் பணம் கிடைக்கும். சில நிறுவனங்கள் அவர்களது விளம்பரத்திற்காக எனது வீடியோக்களை ஸ்பான்சர் செய்கிறார்கள். இந்த வகையில் எனக்கு மாதம் 70 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது” என்கிறார்.

இவர் உருவாக்கும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் ஓடுகிறது. முழுமையாக ஆராய்ந்த பின்பே அந்த விஷயம் பற்றி வீடியோ உருவாக்குகிறார். பயணம், உணவு, வாகனம் பற்றியும் இவர் வீடியோ உருவாக்குகிறார். வீட்டில் இருந்தபடியே வீடியோ ப்ளாக்கிங் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி? என்பது பற்றியும் வீடியோ ஒன்று தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். கேரளாவை சேர்ந்த ஜின்ஷா- பைசல் தம்பதிகளுக்கு இனாரா என்ற குழந்தை உள்ளது. 

Next Story