மாவட்ட செய்திகள்

பெண்களுக்கான வேலைவாய்ப்பு (கால்நடை தீவனமான அசோலா பாசி வளர்ப்புமுறை) + "||" + Employment for women Animal feeding Azolla algae method

பெண்களுக்கான வேலைவாய்ப்பு (கால்நடை தீவனமான அசோலா பாசி வளர்ப்புமுறை)

பெண்களுக்கான வேலைவாய்ப்பு (கால்நடை தீவனமான அசோலா பாசி வளர்ப்புமுறை)
கால்நடைகளுக்கான தீவனங்களில் குறிப்பிடத்தக்கது, அசோலா. பாசி வகையான இது நீரில் மிதக்கும் தாவரமாகும். மிகச்சிறிய இலைகளையும், மெல்லிய வேர்களையும் கொண்டிருக்கும்.
கறவை மாடுகள் மட்டுமின்றி கோழிகள், முயல், ஆடு போன்றவைகளும் இதனை  விரும்பி உண்ணும். இதில் கால்நடைகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் அமினோ அமிலங்கள் மற்றும் வளர்ச்சிக்கு தேவைப்படும் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள் போன்றவைகளும் உள்ளன.


சமீப காலங்களில் பசுந்தீவனம், உலர் மற்றும் அடர் தீவனத்துடன் அசோலாவையும் கலந்து புரதசத்து மிகுந்த தீவன பொருளாக கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தீவன செலவில் நான்கில் ஒரு பங்கு குறைகிறது. வெள்ளாட்டினங்கள், செம்மறி ஆடுகள், கறவை மாடுகள், வாத்து, கோழி இனங்கள், முயல்கள், மீன்களுக்கு சிறந்த கலப்பு தீவனமாக இதனை பயன் படுத்தி வருகிறார்கள். அசோலாவில் புரதம் அதிகமாகவும், லிக்னின் குறைவாகவும் இருப்பதால், கால்நடைகளுக்கு எளிதாக ஜீரணமாகிவிடுகிறது.

வீட்டில் இதை எளிதாக வளர்க்கலாம். இதற்காக பாத்திகள் தயார் செய்யவேண்டும். அசோலாவை வளர்த்திட அதிக இட வசதியோ, முதலீடோ தேவையில்லை. இதை உற்பத்தி செய்ய குறைந்த நேரமே போதுமானதாகும்.பாத்திகள் அமைக்கும்முறை பற்றி பார்ப்போம்:


சில்பாலின் விரிப்பு (பாய்), சூப்பர் பாஸ்பேட், பசுமை வலை, தாதுஉப்புக் கலவை, செங்கற்கள் ஆகியவைகளைக் கொண்டு 6 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட பாத்தியை தயார் செய்யலாம். பாத்திக்குள் மரங்களின் வேர்கள் மூலம் ஏற்படும் சேதத்தை தடுக்க பழைய உரச்சாக்குகளை விரிக்க வேண்டும். மேலும் வெயில் நேரடியாக விழுவதை தடுக்கும்விதமாக பச்சை வண்ண வலையை, நான்கு புறமும் குச்சி நட்டு கூடாரம் போன்று கட்டி விட வேண்டும். பின்னர் சில்பாலின் பாயை விரித்து பாத்தியை உருவாக்க வேண்டும். காற்று மூலம் சேதம் ஏற்படுவதை தவிர்க்க பக்கவாட்டில் வரிசையாக செங்கற்களை அடுக்கவேண்டும். பின்பு உள்ளே தண்ணீர் ஊற்றி, 30 கிலோ செம்மண்ணை கொட்டி மட்டப்படுத்துங்கள்.

அதில் 2 கிலோ புதிய பசுஞ்சாணம், 30 கிராம் சூப்பர் பாஸ்பேட், 10 கிராம் தாதுஉப்பு கலவை போன்றவைகளை சேர்த்து நன்கு கலக்கி ஊற்ற வேண்டும். பின்னர் அதில் 250 கிராம் அசோலா விதைகளை தூவி, தேவைக்கு ஏற்ப தண்ணீரை ஊற்றி நன்றாக கலக்கி விட்டுவிடவேண்டும். 15-வது நாளில் தொட்டி முழுவதும் அசோலா படர்ந்துவிடும்.

அசோலா 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் செழித்து வளரும். கடுமையான பகல் நேர வெயில் நேரடியாக படும்வகையில் அசோலா வளர்ப்பு குழிகளை அமைக்க கூடாது. பகல் நேர வெயில் படாத வகையில் மேலே பச்சை நிற துணி கட்டி நிழல் படுமாறு அமைக்க வேண்டும். காலை, மாலை நேர இளம் வெயில் அசோலாவுக்கு மிக நல்லது.

இது அதிவேகமாக வளரும் தன்மையுடையது என்பதால், தினமும் அறுவடை செய்து, புதிதாக வளருவதற்கு இடவசதி செய்து தர வேண்டும். புதிய அசோலா விதைகளை 5 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை போட வேண்டும். போடும்போது தண்ணீரில் உள்ள இலை, தழை குப்பைகளை அகற்றிவிட வேண்டும்.

அசோலா உற்பத்திக்கு பசுஞ் சாணம் பயன்படுத்தப்படுவதால், அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் முன்பு, அவற்றை சேகரித்து சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். 4 முதல் 5 முறை தண்ணீரில் அலசிய பின்பே கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும். அதில் சாணத்தின் மணம் இருந்தால் கால்நடைகள் உண்ணாது. அலசும்போது தண்ணீரோடு சேர்ந்து வரும் சிறிய செடிகளை மீண்டும் அசோலா வளர்ப்பு தொட்டியிலேயே விட்டுவிட வேண்டும். பிறகு அடர் தீவனத்துடன் கலந்து கால்நடைகளுக்கு கொடுக்கலாம், அசோலாவை உலர வைத்தும் கொடுக்கலாம்.நாள் ஒன்றுக்கு 1.5 கிலோ அசோலாவை கறவை மாடுகளுக்கு குடிநீரில் கலந்து கொடுக்க வேண்டும். இதை உண்பதற்கு தொடக்கத்தில் கறவை மாடுகள் தயக்கம் காட்டும். பின்னர் அவை நன்கு உட்கொள்ளும். இதனை உண்ணும் கறவை மாடுகள் தரும் பாலின் அளவு 350 மில்லி முதல் 450 மில்லி வரைக்கும் அதிகரிக்கும்.

கறவை மாடு, உழவு மாடு மற்றும் பால் வற்றிய மாடுகளுக்கு அளிக்கப்படும் கலப்பு தீவனத்தில் 3-ல் ஒரு பங்கு என்ற விகிதத்தில் அசோலாவை கலந்து கொடுக்கலாம். 10 லிட்டர் பால் கொடுக்கும் கறவை மாட்டிற்கு கலப்பு தீவனம் கொடுக்கும் போது, 660 முதல் 830 கிராம் அசோலாவை கலந்து கொடுக்கலாம்.

இதேபோல் கோழி குஞ்சுகளுக்கு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 கிராம் என்ற அளவிலும், கறிக்கோழி மற்றும் முட்டை கோழி இனங்களுக்கு 40 முதல் 50 கிராம் என்ற அளவிலும், கலப்பு தீவனத்துடன் கலந்து கொடுக்கலாம். முயல் ஒன்றுக்கு 100 முதல் 150 கிராம் வீதம் தினசரி கொடுக்கலாம். கோழிகளுக்கு இவற்றை கொடுப்பதால் முட்டையிடும் தன்மை அதிகரிக்கும். ஆரோக்கியமும் மேம்படும். ஆடுகளுக்கு தினமும் 300 முதல் 500 கிராம் வீதம் காலை மற்றும் மாலை வேளையில் வழங்கலாம். பசுந்தீவனம், உலர் தீவனம் அல்லது அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம். அதிகபட்சமாக நாளொன்றுக்கு ஒரு கிலோ வரைக்கும் கொடுக்கலாம்.

மீன் பண்ணைகள் இப்போது நிறைய உருவாக்கப்பட்டிருக்கின்றன. அசோலா அங்கும் பெரும் பங்கு வகிக்கிறது. மீன் குஞ்சு களைவிட்டு 35 நாட்கள் ஆன பிறகு ஆயிரம் குஞ்சுகளுக்கு தினமும் 2 கிலோ வரை, அசோலாவை பரவலாக தூவ வேண்டும். இதனை தின்னும் மீன்கள் வேகமாக வளர்ச்சியடையும். முயல் பண்ணை வைத்து இருப்பவர்களும் அசோலாவை பயன்படுத்தலாம். இதனால் பசுந்தீவன பிரச்சினை தீரும். ஒரு முயலுக்கு தினமும் 75 கிராம் முதல் 100 கிராம் வரை கொடுக்கலாம். அசோலா முயலின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும். அசோலா விதைகளை நெல் நாற்று வயல்களில் தூவிவிட்டால், வயலில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது நன்கு செழித்து வளரும். தண்ணீர் இல்லாமல் வற்றிப்போகும் போது, அசோலா மக்கி உரமாகி பயிருக்கு ஊட்டம் கொடுக்கும். அதன் மூலம் உரச் செலவையும் குறைக்கலாம்.

(அடுத்த வாரம்: கோடை மற்றும் வறட்சி கால தேவைக்கு தீவனபயிர்களை பதப்படுத்தி சேமிக்கும் முறை)

தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.


அதிகம் வாசிக்கப்பட்டவை