ரசகுலாவுக்கான இனிப்புப் போர்


ரசகுலாவுக்கான இனிப்புப் போர்
x
தினத்தந்தி 10 Jun 2018 2:06 PM IST (Updated: 10 Jun 2018 2:06 PM IST)
t-max-icont-min-icon

இனிப்பு பலகாரம் ஏதாவது ஒன்றின் உரிமைக்காக இரண்டு மாநிலங்கள் மோதிக்கொள்வது அரிதான விஷயம். அப்படி ஒரு மோதலுக்கு காரணமாக இருப்பது ரசகுலா.

இந்தியர்களை வெகுவாக கவர்ந்த இந்த இனிப்பிற்கு ஒடிசாவும், மேற்கு வங்காளமும் உரிமைகொண்டாடிக்கொண்டிருக்கின்றன.

ரசகுலாவை இந்திய இனிப்புகளின் ராஜா என்று, அதன் சுவையை அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள். எலுமிச்சை சாறின் உதவியோடு பாலைப் பிரித்து தயாராக்கி, சர்க்கரை கரைசலில் ஊறவைத்து பஞ்சுப்பொதி போன்று தூய வெள்ளை நிறத்தில் உருவாக்கப்படும் ரசகுலா வெளிநாட்டு மக்களையும் நாக்கில் உமிழ்நீர் சுரக்கச் செய்துகொண்டிருக்கிறது. இங்கே அது தங்கள் மாநிலத்திற்குத்தான் சொந்தமானது என்று இரண்டு மாநிலங்களும் உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

அறிவுஜீவிகளின் பாரம்பரியம் தங்களுக்கே உரித்தானது என்று எப்போதுமே மேற்கு வங்காளம் கருதுவதுண்டு. நோபல் பரிசு போன்ற சில முதன்மைகளுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள். தேசியமும், இலக்கியமும், கம்யூனிசமும், கால்பந்தும் முதலில் தலைதூக்கியது எங்களிடமிருந்துதான் என்று அவர்கள் உரிமைக் கொண்டாடுவதுண்டு. அதுபோல் ரசகுலாவும் தங்கள் மாநிலத்தில் இருந்து உருவானதாக அவர்கள் சொல்கிறார்கள். 1868-ம் ஆண்டு கொல்கத்தா பாக் பஜாரில் நோபின் சந்திரதாஸ் என்ற வியாபாரி ரசகுலாவை முதன் முதலில் தயாரித்ததாக மேற்கு வங்காளம் சொல்கிறது.

‘நீங்கள் 150 வருடங்களுக்கு முன்பிருந்துதானே சொந்தம் கொண்டாடுகிறீர்கள். எங்களுக்கும், அதற்கும் 800 வருட பாரம்பரியம் இருக்கிறது. 12-ம் நூற்றாண்டில் இருந்து பூரி ஜெகநாதர் ஆலயத்தில் ரசகுலாவை வைத்து நாங்கள் வழிபாடு செய்துகொண்டிருக்கிறோம்’ என்று ஒடிசா சொல்கிறது.

உலகப் புகழ்பெற்ற ஜெகநாதர் ஆலயம் பூரியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. பழமை வாய்ந்த அந்த கோவிலில் 800 ஆண்டுகளுக்கும் மேலாக ரசகுலாவை வைத்து வழிபாடு செய்கிறார்கள். அதனால் அங்குதான் அது உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். அவர்கள் அதற்கு ஆதாரமாக தங்கள் மாநில இலக்கியங்களில் இருந்தும் மேற்கோள்காட்டுகிறார்கள். பலராம் தாஸ் (1472-1550), பிரசனாநாத் பட்ஜனா (1730-1800), சமந்த் சிங்கர் (1760-1806) போன்றவர்களின் படைப்புகளில் ரச குலாவை பற்றிய குறிப்புகள் உள்ளன. 1843-ல் பாதிரியார் ஆமோஸ் ஷட்டன் என்பவர் ஆங்கிலம்- ஒடிய மொழி அகராதி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதில் ரோசக்கோரா என்ற இனிப்்ைப பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்த இனிப்புக்கும், ரசகுலாவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.

‘உலகத்திற்கு நாங்கள் வழங்கிய மிகப் பெரிய இனிப்புப் பரிசு ரசகுலா’ என்று, மேற்கு வங்காளம் பெருமைகொண்டாடி, அதற்கு உரிமையும் கொண்டாடுகிறது. ‘எங்கள் மாநிலத்தில் இருந்துதான் 75 ஆண்டுகளுக்கு முன்பு ரசகுலா ஒடிசாவுக்கு போனது. பூரி ஜெகநாதர் ஆலயத்தில் பழைய காலத்தில் ரசகுலா வழிபாடு நடந்தது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒடிசாவின் முன்னாள் முதல் மந்திரி பிஜூ பட்நாயக்கூட பெங்காலி ரசகுலாைவ புகழ்ந்து பேசியிருக்கிறார். ஒடிசாவில் உள்ள பகேலா கிராமத்தில் மோகனரசகுலா என்பது தயாராகிறது. அதையும் எங்களது பெங்காலி ரசகுலாவையும் ஒன்றாக கருதக்கூடாது’ என்று மேற்கு வங்காளம் சொல்கிறது. ஒடிசாவில் ரசகுலாவுக்கான முதல் கடை 1956-ல்தான் திறந்ததாகவும் சொல்கிறார்கள். பிரபல சரித்திர ஆய்வாளர் ஹரிபாத பவுமிக்கும் இந்த ரசகுலா மேட்டரை கையில் எடுத்துவிட்டார். அவர் சரித்திர விஷயங்களை எல்லாம் தொகுத்து ‘ரசகுலா’ என்ற பெயரில் ஒரு புத்தகமே எழுதிவிட்டார்.

இரண்டு மாநில அரசுகளும் ரசகுலாவுக்கு சொந்தம் கொண்டாடும் இறுதிக்கட்ட ‘போரில்’ இறங்கியிருக்கிறது. சான்றுகளை திரட்ட இரு மாநில அரசுகளும் பல்வேறு கமிட்டிகளை உருவாக்கியுள்ளன. அவர்கள் சரித்திர சான்றுகளை தேடிக்கொண்டிருக் கிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, ரசகுலாவை சப்புக்கொட்டி ருசிப்பவர்களும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

Next Story