தஞ்சை பகுதியில் பலத்த காற்றினால் நெற்பயிர்கள் சாய்ந்தன


தஞ்சை பகுதியில் பலத்த காற்றினால் நெற்பயிர்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 11 Jun 2018 4:30 AM IST (Updated: 10 Jun 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பகுதியில் பலத்த காற்றினால் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றுமுன்தினம் பலத்த காற்று வீசியது. இந்த காற்றினால் தஞ்சை நீதிமன்ற சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் இருந்த அரசமரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இந்த மரக்கிளையானது மின்கம்பிகளின் மீது விழுந்ததால் அடுத்தடுத்து இருந்த மின்கம்பங்கள் வளைந்தன. மரக்கிளை உடனே அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் மின்கம்பிகள் சரி செய்யப்படாததால் இரவு விடிய, விடிய அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

நேற்று மின்கம்பிகளை மாற்றும் பணியில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை நீதிமன்ற சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுவழியாக திருப்பி விடப்பட்டன. மோட்டார் சைக்கிள் மட்டும் சென்று வந்தன. நீதிமன்றசாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நின்ற மரம் சாய்ந்து பழைய கட்டிடத்தின் மீது விழுந்தது. இதனால் அந்த கட்டிடமும் சேதம் அடைந்தது.


தஞ்சை பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயிகள் பலர் கோடை நெல் சாகுபடி செய்து இருந்தனர். அவைகள் நன்றாக விளைந்திருந்த நிலையில், பலத்த காற்றினால் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். ஆடி காற்றில் அம்மியே பறக்கும் என்பார்கள். ஆனால் வைகாசி மாத கடைசியிலேயே காற்று வேகமாக அடிக்க தொடங்கிவிட்டது. நேற்றும் காற்றின் வேகம் அதிகமாக தான் இருந்தது. இதனால் புழுதி பறந்து வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

Next Story