எட்டயபுரம் அருகே கன்டெய்னர் லாரிகள் மோதல்; டிரைவர் பலி மற்றொருவர் காயம்


எட்டயபுரம் அருகே கன்டெய்னர் லாரிகள் மோதல்; டிரைவர் பலி மற்றொருவர் காயம்
x
தினத்தந்தி 11 Jun 2018 2:00 AM IST (Updated: 11 Jun 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே, 2 கன்டெய்னர் லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எட்டயபுரம், 

எட்டயபுரம் அருகே, 2 கன்டெய்னர் லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் லேசான காயம் அடைந்தார்.

கன்டெய்னர் லாரிகள் மோதல்

தூத்துக்குடி வேதமாணிக்கபுரத்தை சேர்ந்தவர் ஆதிக்க பெருமாள் (வயது 48). கன்டெய்னர் லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவில் மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி லாரியை ஓட்டி வந்தார். எட்டயபுரம் பாப்பாத்தி அருகே வந்தபோது லாரி திடீரென பழுதானது. இதனால் லாரியை ரோட்டோரம் நிறுத்திவிட்டு ஆதிக்க பெருமாள் லாரியில் இருந்து இறங்கிச் சென்றார். பின்னர் லாரியின் முன்பாக நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு கன்டெய்னர் லாரி திடீரென நிலைதடுமாறி, அங்கு ரோட்டோரம் நிறுத்தி வைத்திருந்த அந்த லாரியின் பின்னால் பலமாக மோதியது. இதில் அந்த லாரி முன்னோக்கி சென்றதால் ஆதிக்க பெருமாள் மீது மோதிவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மற்றொருவர் காயம்

இந்த விபத்தில் மற்றொரு லாரி டிரைவர், தூத்துக்குடி தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த மூக்காண்டி மகன் உத்திரகுமார் (34) என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். உத்திரகுமாரை மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ஆதிக்க பெருமாளின் உடலையும் மீட்டு பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ஆதிக்க பெருமாளுக்கு, மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.


Related Tags :
Next Story