பொள்ளாச்சியில் ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்தது; 4 பேர் உயிர் தப்பினர்
பொள்ளாச்சியில் ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அடுத்த குள்ளக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகசுந்தரம் (வயது 40), விவசாயி. இவர் தனது உறவினர் வீட்டுக்கு செல்வற்காக நேற்று காலை 10 மணி அளவில நேற்று காலை பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு சாலையில் உள்ள முத்தூர் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார். அவரது மனைவி மற்றும் உறவினர்கள் 2 பேர் உடன் சென்றனர்.
பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையம் அருகே சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கனகசுந்தரத்திடம் கூறினர். இதையடுத்து அவர் உடனடியாக காரை நிறுத்தினார். உடனடியாக காரில் இருந்த அனைவரும் கீழே இறக்கினார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் காரில் தீப்பற்றி எரிந்தது.
அப்போது அங்கு இருந்த போக்குவரத்து போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் காரின் மீது தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். காரில் கியாஸ் பொருத்தப்பட்டு இருந்த பகுதியில் தீ பிடித்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆனால் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.