குள்ளக்காபாளையத்தில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்படும்


குள்ளக்காபாளையத்தில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்படும்
x
தினத்தந்தி 10 Jun 2018 10:15 PM GMT (Updated: 10 Jun 2018 6:51 PM GMT)

குள்ளக்காபாளையத்தில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிட்டு உள்ளதாக வடக்கு ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளக்காபாளையத்தில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் 19 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது அந்த வீடுகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக வீடுகளில் மழைநீர் ஒழுகிறது. இதற்கிடையில் நரிக்குறவர்கள் பழுதடைந்த வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று சப்–கலெக்டர் அலுவலகம், ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் குள்ளக்காபாளையத்தில் உள்ள நரிக்குறவர்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், விவேகானந்தன், தாசில்தார் செல்வபாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:–

குள்ளக்காபாளையத்தில் நரிக்குறவர்களுக்கு 19 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இங்கு சுமார் 75 பேர் வரை வசித்து வருகின்றனர். தொகுப்பு வீடுகள் பழுதடைந்து விட்டதால் புதிதாக வீடு கட்டி கொடுப்பது குறித்து சப்–கலெக்டர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஒன்றிய பகுதிகளில் ஏராளமானோருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று நரிக்குறவர்களுக்கும் பசுமை வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்கான ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story