பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் வழங்க மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க பள்ளி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க கூடாது. இதை மீறி கட்டணம் வசூலித்தார் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் எச்சரிக்கை விடுத்துள்ளா
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க பள்ளி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க கூடாது. இதை மீறி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
மாற்றுச்சான்றிதழ்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் கோரி மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் போது, எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டியது பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர்களின் கடமை. இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் கட்டணம்மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 2018–19–ம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான சேர்க்கையை திட்டமிட்டப்படி முடித்திட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளில் எல்.கே.ஜி.–ல் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது.
மெட்ரிக் மற்றும் நர்சரி, பிரைமரி பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை பள்ளிகளின் தகவல் பலகையில் அனைவரும் பார்க்கும் படி இடம் பெற செய்ய வேண்டும். எந்தவித புகார்களும் இன்றி அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை தவிர கூடுதலாக நிதி வசூல் செய்யக்கூடாது. அவ்வாறு புகார்கள் ஏதும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டால, துறை ரீதியாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.