திண்டுக்கல் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் சிலை திறப்பு


திண்டுக்கல் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் சிலை திறப்பு
x
தினத்தந்தி 10 Jun 2018 11:15 PM GMT (Updated: 10 Jun 2018 7:22 PM GMT)

திண்டுக்கல் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட எம்.எஸ்.பி. சோலைநாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் சிலை திறக்கப்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் முழுஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு எம்.எஸ்.பி.பள்ளி தலைவர் மதிச்செல்வன் தலைமை தாங்கினார்.

திண்டுக்கல் நாடார் உறவின்முறை தலைவர் சங்கரலிங்கம், எஸ்.எம்.பி.எம். பள்ளி தலைவர் சிற்றம்பலநடராஜன், கே.கே.ஏ.ஜி. பள்ளி தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் டி.ராஜகுமார் கலந்து கொண்டு காமராஜரின் சிலையை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், கல்வி மற்றும் ஆன்மிக பணிகளுக்கு அள்ளிக்கொடுத்த வள்ளல் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்திஆதித்தனாருக்கு இங்கு சிலை அமைக்க வேண்டும். அதற்கான செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன், என்றார்.

விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது, கர்மவீரர் காமராஜர் அனைவரும் கல்வி பெற வேண்டும் என்று விரும்பி பள்ளிக்கூடங்களை தொடங்கினார். குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க, மதிய உணவையும் வழங்கினார். தற்போது, தமிழக அரசு கல்விக்காக அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது. இங்கு பள்ளியின் முன்னாள் தாளாளர் ரெத்தினபாண்டியனுக்கும் சிலை அமைக்க வேண்டும். அதற்கான செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன், என்றார்.

நெல்லை தெட்ஷணமாற நாடார் சங்க தலைவர் டி.சபாபதி நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முடிவில் எம்.எஸ்.பி. பள்ளி தாளாளர் பி.முருகேசன் நன்றி கூறினார்.

இதையடுத்து அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் வளாகம் திறப்பு விழா நடந்தது. இதனை தெட்ஷணமாற நாடார் சங்கத்தின் மும்பை கிளை தலைவரும், மும்பை காமராஜ் ஜூனியர் கல்லூரி தலைவருமான ராமராஜா திறந்து வைத்தார். டாக்டர் மகிழ்மாறன் கலையரங்கை திறந்து வைத்தார்.

மேலும் வகுப்பறைகளை, பி.எஸ்.என்.ஏ.பொறியியல் கல்லூரி இயக்குனர் ஆர்.எஸ்.கே.ரகுராம், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி இயக்குனர் துரைகார்த்திக், பார்வதீஸ் கலைக்கல்லூரி இயக்குனர் சீனிவாசன், நாட்டாண்மை காஜாமைதீன், எம்.எஸ்.பி. கிரானைட் நிறுவன நிர்வாகிகள் சந்தோஷ், அருண்பாலாஜி, அரசு ஒப்பந்ததாரர்கள் ராஜ்மோகன், வெங்கடேசன், எரியோடு நாடார் உறவின்முறை நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் திறந்து வைத்தனர்.

விழாவில் உதயகுமார் எம்.பி., தொழில் அதிபர் எஸ்.கே.சி.குப்புசாமி, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜான்பிரகாசம், திண்டுக்கல் நாடார் உறவின்முறை செயலாளர் வி.எஸ்.தர்மராஜன், எஸ்.எம்.பி.எம்.மெட்ரிக் பள்ளி செயலாளர் எஸ்.எம்.பி.எம்.பாலசுப்பிரமணியம், கே.கே.ஏ.ஜி. பள்ளி செயலாளர் தமிழ்செல்வன், எம்.எஸ்.பி. பள்ளி, எஸ்.எம்.பி.எம். பள்ளி, கே.கே.ஏ.ஜி. பள்ளி நிர்வாகிகள், நாடார் உறவின்முறை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story