மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவு: வனப்பகுதியில் கடத்தப்பட்ட மணல் அதே இடத்தில் கொட்டப்பட்டது


மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவு: வனப்பகுதியில் கடத்தப்பட்ட மணல் அதே இடத்தில் கொட்டப்பட்டது
x
தினத்தந்தி 11 Jun 2018 3:15 AM IST (Updated: 11 Jun 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவின்பேரில் சென்னம்பட்டி வனப்பகுதியில் கடத்தப்பட்ட மணல் மீண்டும் அதே இடத்தில் கொட்டப்பட்டது.

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்தில் ஜரத்தல் ஏரி உள்ளது. மழை காலங்களில் வண்டல் மண் மற்றும் மணல் தண்ணீரோடு இந்த ஏரிக்கு வந்து சேரும். இந்த நிலையில் சென்னம்பட்டி பாப்பாத்திகாடு புதூர் அருகே உள்ள கூப்புக்காடு என்ற இடத்தில் மணல் குவியல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அறிந்த ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்மிஜு விஸ்வநான் மணல் கொட்டி வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் தங்கள் வீட்டு தேவைக்காக தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் இருந்து டிராக்டர் மூலம் மணல் கடத்தியதாக ஒப்புக்கொண்டார்கள். இதைத்தொடர்ந்து ஒருவருக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் 4 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக வன ஊழியர்கள் 3 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணலை மீண்டும் அள்ளிய இடத்தில் கொட்டவும் மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவிட்டார். அதன்பேரில் குவித்து வைத்திருந்த மணலை சென்னம்பட்டி வனச்சரக அதிகாரி செங்கோட்டையன் முன்னிலையில் டிராக்டரில் அள்ளி மீண்டும் வனப்பகுதியில் அதே இடத்தில் கொட்டினார்கள். இதன் மூலம் அந்த இடம் சமன்படுத்தப்பட்டது.


Next Story