அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 11 Jun 2018 4:30 AM IST (Updated: 11 Jun 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.49 கோடியே 6 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட 3 நாட்களில் மாணவ–மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆனால் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்கிற தவறான செய்தி பரவுகிறது. பள்ளிக்கூடங்களுக்கு செல்லாத மாணவ–மாணவிகளுக்கு மட்டுமே புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு புத்தகம் கிடைக்க தாமதம் ஏற்படுகிறது. அதுவும் வருகிற வெள்ளிக்கிழமையுடன் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பயிற்சியை தொடங்கினோம். இந்த ஆண்டு முன்கூட்டியே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளிக்கூடத்தில் 2 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் 63 பேரும் என மொத்தம் 65 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 1,412 மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கான ‘கட்–ஆப்’ மதிப்பெண்கள் பட்டியல் நாளை (அதாவது இன்று) வெளியாகிறது. அதன்பிறகு தேர்ச்சி பெற்றவர்களில் எத்தனை பேர் மருத்துவ கல்வி பெற உள்ளனர் என்ற விவரம் தெரியவரும். அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுவது இந்தியாவில் முதல் முறையாக நடக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற பயிற்சி நடத்தப்படவில்லை.

ஜாக்டோ–ஜியோ போராட்டம் குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஜெயக்குமார் தான் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story