கிருஷ்ணகிரியில் 26-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி


கிருஷ்ணகிரியில் 26-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி
x
தினத்தந்தி 10 Jun 2018 11:00 PM GMT (Updated: 10 Jun 2018 7:45 PM GMT)

கிருஷ்ணகிரியில் 26-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேற்று தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்கனி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள மா விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 26-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்க விழா கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் 348 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்து 22 ஆயிரத்து 150 மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கலெக்டர் கதிரவன் வரவேற்று பேசினார்.

இதில் அசோக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சி.வி.ராஜேந்திரன் (பர்கூர்), மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங்கரை), கிருஷ்ணகிரி முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் தென்னரசு, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கே.நாராயணன், மாநில நில வள வங்கி தலைவர் சாகுல்ஹமீது, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி நன்றி கூறினார்.

முன்னதாக கண்காட்சியை தொடங்கி வைத்து, அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் 50 அரசு துறை அரங்குகள், 80 தனியார் அங்காடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 14 வகையான நறுமண பொருட்களால் ஆன தாஜ்மகால் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதே போல ரோஜா பூக்களால் பொம்மைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாங்கனிகளால் முதலை, மயில், மீன், டிராகன், கொக்கு உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டு இருந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பல்வேறு ரக மாங்கனிகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தன. இந்த மாங்கனி கண்காட்சி 29 நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் மாலை நேரங்களில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 

Next Story