மொபட் மீது மின்கம்பம் விழுந்ததில் கோழிப்பண்ணை அதிபர் பலி


மொபட் மீது மின்கம்பம் விழுந்ததில் கோழிப்பண்ணை அதிபர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2018 4:30 AM IST (Updated: 11 Jun 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

தாழ்வாக சென்ற மின்கம்பியை லாரி இழுத்து சென்றதால் மொபட் மீது மின்கம்பம் விழுந்ததில் கோழிப்பண்ணை அதிபர் பலியானார்.

மங்களமேடு,

பெரம்பலுார் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் தேவையூர் அருகே உள்ள தனது வயலில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். கோழிகளுக்கு தீவனம் வாங்குவதற்காக நேற்று மாலை துறையூர் சென்றார். பின்னர் தீவனங்களை வாங்கி ஒரு லாரியில் ஏற்றி அனுப்பினார். லாரியை துறையூரை சேர்ந்த லலித்ராஜ்(35) என்பவர் ஓட்டினார். லாரியை பின்தொடர்ந்து செல்வராஜ் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். தேவையூரில் இருந்து கோழிப்பண்ணைக்கு சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் மின்கம்பத்தில் இருந்து தாழ்வாக சென்ற மின்சார கம்பியை லாரி இழுத்து சென்றது. இதனால், அந்த மின்கம்பம் சாய்ந்து லாரியின் பின்னால் மொபட்டில் வந்து கொண்டிருந்த செல்வராஜ் மீது விழுந்தது.

சாவு

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட டிரைவர் லலித்ராஜ் சம்பவ இடத்திலேயே லாரியை நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவர் லலித்ராஜை தேடி வருகின்றனர். 

Next Story