மாவட்ட செய்திகள்

எந்த மொழியிலும் தகவல்களை பெறலாம்: சுற்றுலா பயணிகளுக்கு உதவும் கம்ப்யூட்டர் காவலாளி சிலை + "||" + Computer guardian idol to help tourists

எந்த மொழியிலும் தகவல்களை பெறலாம்: சுற்றுலா பயணிகளுக்கு உதவும் கம்ப்யூட்டர் காவலாளி சிலை

எந்த மொழியிலும் தகவல்களை பெறலாம்: சுற்றுலா பயணிகளுக்கு உதவும் கம்ப்யூட்டர் காவலாளி சிலை
கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான தகவல்களை தரும் கம்ப்யூட்டர் காவலாளி சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை கவர்னர் கிரண்பெடி நேற்று தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி,

புதுவை கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையம் முன்பு ‘சிங்கம்’ என்ற பெயரில் கம்ப்யூட்டர் காவலாளி (ரோபோகாப்) வைக்கப்பட்டுள்ளது. பைபர் கண்ணாடிகளால் ஆன இந்த சிலையை சிற்ப கலைஞர் வி.கே.முனிச்சாமி வடிவமைத்துள்ளார்.

இந்த சிலையின் கைகளில் தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. அதில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சுற்றுலாதலங்கள் பற்றிய விவரங்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கிடைக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான தகவல்களை தொடு திரை கணினியில் உள்ள பொத்தான்களை அழுத்துவதன் மூலம் எந்த மொழிகளில் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் இந்த சிலை செயல்படும். புதுச்சேரி போலீசாரால் அமைக்கப்பட்டுள்ள இந்த காவலாளி சிலையின் செயல்பாட்டை கவர்னர் கிரண்பெடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், ஐ.ஜி. சுரேந்தர் யாதவ், டி.ஐ.ஜி. சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

புதுவையில் சமூக விரோதிகள் சுதந்திரமாக நடமாடக் கூடாது. சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருப்பதில் எனக்கும், முதல்-அமைச்சருக்கும் நல்ல கருத்து ஒற்றுமை உள்ளது.

போலீசார் சுதந்திரமாக செயல்பட வேண்டும். போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கினை விரைவில் முடிக்கவேண்டும். இதுவரை அந்த வழக்கு மீதான விசாரணை சரியான பாதையில் செல்கிறது. முக்கிய குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.