பல்லாரி அருகே நீட் தேர்வில் தோல்வி; மாணவி தூக்குப்போட்டு தற்கொலை தமிழ்நாட்டை சேர்ந்தவர்


பல்லாரி அருகே நீட் தேர்வில் தோல்வி; மாணவி தூக்குப்போட்டு தற்கொலை தமிழ்நாட்டை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 11 Jun 2018 2:45 AM IST (Updated: 11 Jun 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

பல்லாரி அருகே ‘நீட்‘ தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

பெங்களூரு, 

பல்லாரி அருகே ‘நீட்‘ தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

மாணவி தற்கொலை

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சண்டூர் அருகே தோனிமலே கிராமத்தில் வசித்து வருபவர் திருமலை. இவரது மனைவி நாகமணி. இந்த தம்பதியின் மகள் கோமலவள்ளி (வயது 19). திருமலையின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவர் கடந்த பல ஆண்டுகளாக சண்டூரில் தங்கி இருந்து, அங்குள்ள கனிம சுரங்க நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் கோமலவள்ளி பி.யூ.சி. 2–ம் ஆண்டு படித்து முடித்து உள்ளார்.

இந்த நிலையில் ஒசப்பேட்டே தாலுகா டி.பி.டேம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் தனது பாட்டி கோவிந்தம்மாவின் வீட்டிற்கு கோமலவள்ளி தனது பெற்றோருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்று இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென்று கோமலவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதனர்.

‘நீட்‘ தேர்வில் தோல்வி அடைந்ததால்...

இதுபற்றி அறிந்ததும் டி.பி.டேம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோமலவள்ளியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பி.யூ.சி. 2–வது ஆண்டு முடித்துள்ள கோமலவள்ளி மருத்துவம் படித்து டாக்டராக ஆசைபட்டு ‘நீட்‘ தேர்வு எழுதி இருந்தார். ஆனால் ‘நீட்‘ தேர்வில் குறைந்த மதிப்பெண்களே எடுத்து தோல்வி அடைந்தார். இதனால் மனம் உடைந்த மாணவி கோமலவள்ளி தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து டி.பி.டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஏற்கனவே தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் பிரதீபா என்ற மாணவியும், திருச்சியில் சுபஸ்ரீ என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கோமலவள்ளியும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story