சென்னை ரெயிலில் அடிபட்டு 3 பெண்கள் பலி மராட்டியத்தில் பரிதாபம்
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னை- ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாக்பூர்,
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னை- ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவிலுக்கு சென்றனர்
புல்தானா மாவட்டம் சேகாவ் பகுதியில் புகழ்பெற்ற கஜானன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அதே மாவட்டமான நந்தூரா பகுதியை சேர்ந்த பெண்கள் 4 பேர் நேற்று இந்த கோவிலுக்கு வந்தனர்.
சாமி தரிசனத்தை முடித்துகொண்டு மதியம் தங்கள் கிராமத்திற்கு திரும்புவதற்காக சேகாவ் ரெயில் நிலையத்திற்கு சென்றனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மின்சார ரெயிலில் ஏறுவதற்காக அவர்கள் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சென்னை- ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதி சென்றது.
3 பெண்கள் பலி
இந்த கோர விபத்தில் 3 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவர்களின் பெயர்கள் சரிதா விஜய் சாபே(வயது30), சங்கீதா பானுதாய் கோலே(40), சந்தாபாய் சிவாரி திசாரா(45) என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.