அடுத்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். திட்டம்


அடுத்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். திட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2018 9:45 PM GMT (Updated: 10 Jun 2018 9:35 PM GMT)

2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு இருப்பதாக சிவசேனா தெரிவித்து உள்ளது.

மும்பை, 

2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு இருப்பதாக சிவசேனா தெரிவித்து உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த 7–ந்தேதி நிறைவடைந்தது. இதில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

பா.ஜனதாவின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் மத்தியில் இருந்தும், பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மீண்டும் சர்ச்சை

இந்த சர்ச்சை ஓய்வதற்குள் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தற்போதைய அரசியல் நிலவரத்தை பார்க்கும்போது, 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைப்பது சாத்தியம் இல்லை. அவ்வாறு நடந்தால் மற்ற கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் ஆதரவை கொடுக்கமாட்டார்கள்.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு உள்ளது. அவர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக இருப்பார்“ என்றார்.

முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசவில்லை

மேலும் சஞ்சய் ராவுத் கூறுகையில், ‘‘ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, தற்போது நம் நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து எதுவும் வாய்திறக்கவில்லை. விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளில் அரசு செயலற்று கிடக்கிறது. குறிப்பாக நீதித்துறையில் கூட அமைதியின்மை நிலவுகிறது.

இது குறித்து அவர் தனது உரையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்த பிரச்சினைகளை அவர் நிச்சயம் பேசுவார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்“ என்று கூறினார்.

பிரணாப் முகர்ஜியின் மகள் மறுப்பு

இந்தநிலையில் சஞ்சய் ராவுத்தின் கருத்தை பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், என் தந்தைக்கு மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் நிச்சயம் இல்லை என தெரிவித்துள்ளார்.


Next Story