தொடர் திருட்டு நடப்பதாக புகார் எதிரொலி: புதிய பஸ் நிலையத்தில் நள்ளிரவில் போலீசார் ‘திடீர்’ சோதனை


தொடர் திருட்டு நடப்பதாக புகார் எதிரொலி: புதிய பஸ் நிலையத்தில் நள்ளிரவில் போலீசார் ‘திடீர்’ சோதனை
x
தினத்தந்தி 10 Jun 2018 10:45 PM GMT (Updated: 10 Jun 2018 9:45 PM GMT)

பயணிகளின் உடைமைகள் திருடப்படுவதாக வந்த புகார் எதிரொலியால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் போலீசார் நேற்று நள்ளிரவில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு பயணிகள் போர்வையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்தவர்களை விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

வேலூர் புதிய பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். திருப்பதிக்கு செல்லும் பயணிகளும் அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளும் புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்து பஸ்களில் ஏறுகின்றனர். மேலும் இங்கிருந்து சென்னை, திருச்சி, சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களுக்கு 24 மணி நேரமும் பஸ்கள் செல்வதால் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதி வருகிறது.

இரவு நேரங்களில் பயணிகள் அமர்வதற்காக காத்திருப்புக்கூடம் உள்ளது. அங்கு பயணிகள் போர்வையில் வருவோர் வெளியூரை சேர்ந்த பயணிகளின் உடைமைகளை திருடிவிட்டு செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இவ்வாறு பொருட்களை இழந்த வெளியூர் பயணிகள் போலீசாரின் விசாரணைக்கு பயந்து புகார் செய்யாமல் திரும்புகின்றனர். இது குறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், ராமன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவில் புதிய பஸ் நிலையத்தில் ‘திடீர்’ சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி இருந்தவர்கள் சிலர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். தூங்கிக்கொண்டிருந்த சிலரை போலீசார் விசாரித்தனர்.

அவர்களில் சிலரிடம் வெளியூர்களில் இருந்து வந்ததற்கான டிக்கெட் எதுவும் இல்லை. அவர்கள் வேலூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் தேவையின்றி தங்கியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். அப்போது பயணிகளை தவிர இங்கு வேறு யாரும் தேவையில்லாமல் தங்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் சந்தேகப்படும்படியாக அங்கு இருந்தவர்களின் உடைமைகளை வாங்கி சோதனை செய்தனர். போலீசார் கூறுகையில், “பயணிகளின் வசதிக்காகத்தான் காத்திருப்பு அறை உள்ளது. இங்கு வெளியூர் பயணிகள் பஸ் வரும்வரை தாராளமாக தங்கி செல்லலாம். ஆனால் பயணிகள் போர்வையில் வேறு யாராவது தேவையின்றி தங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

நள்ளிரவில் நடந்த இந்த திடீர் சோதனையால் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனை ஒரு நாளுடன் முடிந்து விடக்கூடாது என்றும் அடிக்கடி இதுபோன்ற சோதனைகளை போலீசார் நடத்த வேண்டும் எனவும் பயணிகளில் பலர் தெரிவித்தனர்.

Next Story