பஸ் ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை ஏற்பு வேலை நிறுத்தம் வாபஸ்; பஸ்கள் ஓடத்தொடங்கின
மராட்டியத்தில் பஸ் ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை ஏற்கப்பட்டது. அதை அரசு ஏற்றுக்கொண்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் பஸ் ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை ஏற்கப்பட்டது. அதை அரசு ஏற்றுக்கொண்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் நேற்று முதல் பஸ்கள் வழக்கம் போல ஓடத்தொடங்கின.
பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
மராட்டியத்தில், சம்பள உயர்வு கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஒரு பகுதியினர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதனால் மாநிலம் முழுவதும் அரசு பஸ் சேவைகள் பாதிக்கப்பட்டன.
மொத்தம் உள்ள 250 டெப்போக்களில் 74 டெப்போக்களில் பஸ் சேவைகள் முற்றிலுமாக முடங்கின. 151 டெப்போக்களில் பகுதியாகவும், 25 டெப்போக்களில் இருந்து முழுமையாகவும் பஸ் சேவைகள் இயங்கின.
பஸ் ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம் நேற்று முன்தினமும் 2-வது நாளாக நீடித்தது.
போராட்டம் வாபஸ்
இதன் காரணமாக போக்குவரத்து கழகத்துக்கு 2 நாட்களில் மட்டும் ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர் சங்கங்களிடம் போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பின்னர் மாலை போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே ஊழியர் சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பஸ் ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
நேற்று முதல் அவர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கின.
மந்திரி பேட்டி
இந்த நிலையில் மந்திரி திவாகர் ராவ்தே நிருபர்களிடம் கூறியதாவது:-
பஸ் ஊழியர் சங்கங்களுக்கு இடையேயான போட்டி மனப்பான்மையினால் தான் வேலை நிறுத்தம் நடந்தது. பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஐகோர்ட்டு ஏற்கனவே தடை விதித்து உள்ளது. ஆனாலும் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது துரதிருஷ்டவசமானது.
பஸ் ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கடந்த 1-ந் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. அதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்த சம்பள ஒப்பந்தத்தின்படி புதிய ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் சம்பள உயர்வு கிடைக்கும். 2000-ம் ஆண்டில் இருந்து பணியில் உள்ளவர்களுக்கு ரூ.7 ஆயிரம் சம்பள உயர்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story