உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2018 5:33 AM IST (Updated: 11 Jun 2018 5:33 AM IST)
t-max-icont-min-icon

8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் ஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் கே.ஆர்.குப்புசாமி, திருவள்ளூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரேம்குமார், மாவட்ட தலைமை இடத்து செயலாளர் தணிகாசலம், மாவட்ட மகளிரணி செயலாளர் வேண்டாபாய், நிர்வாகி சுமதி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவலை உடனடியாக ரத்து செய்யவேண்டும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி வழங்குவதை முழுமையாக கைவிட வேண்டும், வெளிப்படையாக கலந்தாய்வு நடத்தவேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தாஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுப்பிரமணியம், பாலு மகேந்திரன், சிகாமணி, மகாலட்சுமி, புஷ்பராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திரளான ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆரம்ப கல்வித்துறையை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும், பணிநிரவலை கைவிட வேண்டும், ஆரம்ப கல்விக்கென தனி அமைச்சரை நியமனம் செய்யவேண்டும், ஒளிவுமறைவற்ற , வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும் என 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் திலகவதி நன்றி கூறினார்.

Next Story