சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக ‘வளமான நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்’


சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக ‘வளமான நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்’
x
தினத்தந்தி 11 Jun 2018 6:30 AM IST (Updated: 11 Jun 2018 6:30 AM IST)
t-max-icont-min-icon

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக வளமான விவசாய நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம், என்று உதவி கலெக்டர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கூறினர்.

ஓமலூர்,

சேலம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலைய விரிவாக்கத்துக்கு காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட விவசாயிகளின் விவசாய நிலங்களை எடுக்கக்கூடாது என்று விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் விவசாயிகள் நிலம் கொடுக்க மறுப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் கடந்த 6-ந்தேதி ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமை தாங்கினார். இதில் ஓமலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காமலாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 8-ந்தேதி காடையாம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தும்பிப்பாடி, பொட்டியபுரம், சிக்கனம்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்ட கூட்டம் காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து நேற்று மாலை காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மேட்டூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) ராமதுரைமுருகன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி, பொட்டியபுரம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உதவி கலெக்டர் ராமதுரைமுருகன் பேசியதாவது:-

தற்போது வட்டாரம் வாரியாக இந்த பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலம், அதில் உள்ள பயிர், குடியிருப்புகளில் உள்ளவர்கள் பாதிப்பு போன்றவை பற்றி அதிகாரிகள் தோராயமாக மதிப்பை கணக்கிட்டு உள்ளனர். நீங்கள் அளவீடு செய்ய அனுமதித்தால் உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அந்தந்த ஊராட்சிகளிலேயே நிலம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- கரடுமுரடாக இருந்த நிலத்தை சீரமைத்து அதில் விவசாயம் செய்து வருகிறோம். டெல்டா மாவட்டங்களை விட அதிக விளைச்சல் காண்கிறோம். இது வளமான பூமி ஆகும். எனவே இந்த நிலத்தை விமான நிலைய விரிவாக்கத்துக்காக விட்டுக்கொடுக்க மாட்டோம்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர். இதனால் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

Next Story