மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் + "||" + collector Sandeep Nanduri informed the Sterlite plant staff to provide alternative work

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22-ந்தேதி சம்பவத்துக்கு பிறகு இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பி உள்ளது. போலீஸ் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். அனைத்து குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சமும், பலத்த காயம் அடைந்த 43 பேரில் 39 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்த 74 பேரில் 25 பேருக்கு தலா ரூ.1½ லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

மீதம் உள்ளவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களுக்கான நிவாரண தொகை தயாராக உள்ளது. மக்கள் எந்தவித பயமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம். காயம் அடைந்தவர்களுக்கு என்ன உதவி தேவை என்பதை அறிந்து அதனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் நிரந்தர ஊனம் அடைந்தவர்கள் குறித்து டாக்டர்கள் அறிக்கை தந்த பிறகே முடிவு செய்ய முடியும். இறந்த 13 பேரின் குடும்பத்துக்கும் தலா ஒரு தாசில்தார் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்த குடும்பத்துக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விட்டதா? அரசு வேலை வழங்குவதற்கான சான்றிதழ்கள் அனைத்தும் உள்ளதா? என்பன உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தெந்த துறையில் எவ்வளவு காலிப்பணியிங்கள் உள்ளன என்ற விவரம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரேஸ்புரத்தில் இலவச மனநல மருத்துவ ஆலோசனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விசாரணைக்காக மக்களை போலீசார் அழைத்து செல்வது குறைந்து உள்ளது. அதே நேரத்தில் முறையான ஆவணங்கள் அடிப்படையில் குற்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். எந்த காரணமும் இல்லாமல் யாரும் கைது செய்யப்படவில்லை.

கோர்ட்டு உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ரூ.100 கோடி டெபாசிட் செய்து உள்ளது. இதன் வட்டி மூலம் ஆலையை சுற்றி உள்ள பகுதிகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது சிறப்புக்குழு அமைத்து, ஆலையை சுற்றி உள்ள பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சுயதொழில் மற்றும் வளர்ச்சிக்கான தேவைகளை அடையாளம் கண்டு, அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அரசு உத்தரவுப்படி ஒரு இணையதளம் உருவாக்கப்படுகிறது. இதில் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றியவர்கள் தங்கள் முழு விவரங்களையும் பதிவு செய்யலாம். அதில் இருந்து தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்யும்.

மேலும் கலெக்டர் அலுவலக ஊழியர்களின் 41 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்து உள்ளன. அந்த வாகனங்களுக்கு போலீசில் வழக்குப்பதிவு செய்து, அதன்மூலம் இன்சூரன்சு தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.