அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தம்
மருதூர்-கண்டம்பாக்கம் இடையே என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த ரெயில் 6¼ மணி நேரம் தாமதமாக விழுப்புரத்துக்கு வந்தது.
விழுப்புரம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு தினமும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது.
இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு 1½ கிலோ மீட்டர் முன்னதாக மருதூருக்கும், கண்டம்பாக்கத்திற்கும் இடையே நேற்று அதிகாலை 4.50 மணிக்கு வந்தபோது என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர், ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.
இது பற்றி ரெயில் டிரைவர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விழுப்புரத்தில் இருந்து ரெயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று என்ஜினில் ஏற்பட்ட கோளறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை சரிசெய்ய முடியவில்லை.
இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு, ரெயிலின் பின்புறத்தில் இணைக்கப்பட்டது. பின்னர் அந்த ரெயில் கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் இணைப்பை துண்டித்து, தனியாக பிரிக்க ரெயில்வே அதிகாரிகள் முயன்றனர். அப்போது என்ஜினில் இடதுபுறத்தில் உள்ள 2-வது சக்கரம் சுழலவில்லை. இதனால் அந்த என்ஜினை மட்டும் தனியாக பிரித்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சுழலாத சக்கரத்தின் அடியில் சுழலும் சக்கரம் கொண்ட ‘ஜாக்கி’ பொருத்தப்பட்டது. பின்னர் ‘ஹைட்ராலிக்’ என்ஜின் மூலம் அனந்தபுரி ரெயில் என்ஜின் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் உள்ள பராமரிப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு காலை 10.50 மணிக்கு கண்டம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு 11.15 மணிக்கு வந்தது.
விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வரவேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில், என்ஜினில் கோளாறு, என்ஜின் சக்கரம் சுழலாதது போன்ற காரணங்களால் 11.15 மணிக்கு வந்தது. அதாவது வழக்கமாக வரும் நேரத்தை விட 6¼ மணி நேரம் காலதாமதமாகும்.
ரெயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விழுப்புரம், திண்டிவனம் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள், 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்தே விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சென்னை பயணிகள் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலிலேயே காத்திருந்து பயணம் செய்தனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story