மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரெயில் சேவைக்காக சென்டிரல் எதிரில் 100 அடி ஆழத்தில் பிரமாண்டமான ரெயில் நிலையம் + "||" + For metro rail service 100 feet deep in the opposite side Tremendous train station

மெட்ரோ ரெயில் சேவைக்காக சென்டிரல் எதிரில் 100 அடி ஆழத்தில் பிரமாண்டமான ரெயில் நிலையம்

மெட்ரோ ரெயில் சேவைக்காக சென்டிரல் எதிரில் 100 அடி ஆழத்தில் பிரமாண்டமான ரெயில் நிலையம்
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக சென்டிரல் ரெயில் நிலையம் எதிரில் 100 அடி ஆழத்தில் பிரமாண்டமான ரெயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் ரிப்பன் கட்டிடம் எதிரில் பூந்தமல்லி சாலையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக பிரமாண்டமான முறையில் 2 அடுக்குகளுடன் சுரங்கத்தில் ரெயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மற்றும் 2-வது வழித்தடமான சென்டிரல்- பரங்கிமலை இடையே உள்ள 2 வழித்தடங்களில் இருந்து வரும் ரெயில்களை நிறுத்துவதற்காக சென்டிரலில் 2 அடுக்குகளில் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தரை தளத்தில் இருந்து 60 அடி ஆழம் மற்றும் 100 அடி ஆழத்தில் இந்த 2 ரெயில் நிலையங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கப்பட்டு வருகின்றன.


இதில் 60 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலைய கட்டுமானப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த ரெயில் நிலையத்துக்கு தற்போது சென்டிரலில் இருந்து விமான நிலையம் வரை பணிகள் நிறைவடைந்த பாதையில் இருந்து வரும் ரெயில்கள் வந்து செல்கின்றன. சென்டிரல்- வண்ணாரப்பேட்டை இடையே பணிகள் நடந்து வருகிறது.

ஏ.ஜி-டி.எம்.எஸ்- ஆயிரம் விளக்கு- எல்.ஐ.சி.- அரசினர் தோட்டம் வழியாக சென்டிரல் வரும் பாதையில் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்த உடன் சென்டிரல் ரெயில் நிலையத்தில் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையத்துக்கு ரெயில்கள் வர இருக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் தரையில் கற்கள் பதிக்கும் பணி, அலங்கார விளக்குகள், பயணிகளுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இது சென்னையில் உள்ள சுரங்க ரெயில் நிலையங்களிலேயே மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு உள்ளது.

சென்டிரல் சுரங்க ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கு ரெயில்வே தலைமையகம், பூங்கா மற்றும் பூங்கா டவுன் ரெயில் நிலையங்கள், ரிப்பன் கட்டிடம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு செல்லும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்டிரல், பூங்கா மற்றும் பூங்கா டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வரும் பயணிகளும் சுரங்க ரெயில் நிலையத்தை எளிதாக சென்றடைய முடியும். இந்த ரெயில் நிலையங்களில் 1 லட்சம் பயணிகள் வரை கையாளும் வசதி உள்ளது. அத்துடன் 500 கார்கள் மற்றும் ஆயிரம் இருசக்கர வாகனங்களுக்கான நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகளுக்காக தனியாக விமான நிலையத்தில் இருக்கும் நடைமுறைகளை (செக்-இன்) செயல்படுத்தும் மையம் போன்ற வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது.

சுரங்க ரெயில் நிலையத்துக்கு மேலே டவுன் பஸ்கள் நிறுத்தமும் அமைக்கப்பட்டு வருகிறது. மின்சக்தி மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்குவதற்கு துணை மின் நிலையம் மற்றும் பூங்காவும் அமைக்கப்பட்டு வருகிறது.

ரெயில் நிலையத்தில் உணவு கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், டிக்கெட் விற்பனைக்காக 14 டிக்கெட் கவுண்ட்டர்கள், 15 லிப்டுகள், நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

லண்டன், நியூயார்க், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஐரோப்பா நாடுகளில் உள்ள மெட்ரோ ரெயில் நிலைய வசதிகளை பார்வையிட்டு அதே போன்று சென்டிரல் ரெயில் நிலையத்திலும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் 100 அடி ஆழத்தில் உள்ள பிரமாண்டமான ரெயில் நிலையத்தில் இருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.