தனியார் கார் நிறுவன ஊழியருக்கு அரிவாள் வெட்டு 7 பேருக்கு வலைவீச்சு


தனியார் கார் நிறுவன ஊழியருக்கு அரிவாள் வெட்டு 7 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Jun 2018 10:45 PM GMT (Updated: 11 Jun 2018 7:13 PM GMT)

கேரம் விளையாட்டில் முன்விரோதம் காரணமாக தனியார் கார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சர்மாநகர் 9-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவர் மாதவரத்தில் உள்ள கார் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் அருண்குமார்(28). அம்பத்தூரில் வசித்து வரும் இவர் அங்கேயே கடை நடத்தி வருகிறார்.

அடிக்கடி வியாசர்பாடி வரும் அருண்குமார் நண்பர்களுடன் சேர்ந்து தெருவில் கேரம் விளையாடுவது வழக்கம். அவர்கள் பணம் வைத்தும் கேரம் விளையாடுவதாக தெரிகிறது. கேரம் விளையாட்டு தொடர்பாக அருண்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிஷோர் குமார்(24) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், எனது அண்ணனிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று கிஷோர்குமாரிடம் தட்டிக்கேட்டார். இந்த நிலையில் மணிகண்டன் நேற்றுமுன்தினம் இரவு வியாசர்பாடி எஸ்.ஐ.காலனி 8-வது தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த கிஷோர்குமார், அவரது நண்பர் அருண்பாண்டியன்(24) உள்பட 8 பேர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் உடலில் படுகாயம் அடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் எம்.கே.பி. நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிஷோர்குமார் உள்பட 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொடுங்கையூர் எம்.ஆர். நகர், கண்ணதாசன் நகர் பகுதிகளில் வாலிபர்கள் சிலர் சாலையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதும், கேரம் விளையாடுவதும் வழக்கமாக உள்ளது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்படும். இதனால் பள்ளி குழந்தைகள், பெண்கள் அந்த வழியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் பலமுறை கொடுங்கையூர் போலீசில் தகவல் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story