மனுக்கள் குப்பைக்கூடைக்கு போகிறதா? என்று கேட்டு மேசையைதட்டிய மாற்றுத்திறனாளி உள்பட 2 பேரை கைது செய்ய கலெக்டர் உத்தரவு


மனுக்கள் குப்பைக்கூடைக்கு போகிறதா? என்று கேட்டு மேசையைதட்டிய மாற்றுத்திறனாளி உள்பட 2 பேரை கைது செய்ய கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 12 Jun 2018 4:00 AM IST (Updated: 12 Jun 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

குறைதீர்வு கூட்டத்தில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்கள் குப்பைக்கூடைக்கு போகிறதா? என்று கேட்டு மேசையை தட்டிய மாற்றுத்திறனாளி உள்பட 2 பேரை கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு, கல்விக்கடன், வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் 5 பெண்களுக்கு தையல் எந்திரம், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள், 20 பெண்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடன் உதவி, கருணை அடிப்படையில் 8 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணிநியமன ஆணை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

ஆற்காடு தாலுகா நம்பரை கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமதாஸ் (வயது30) என்பவர், தனது நண்பர் சுரேஷ் என்பவருடன் கோரிக்கை மனு கொடுக்க வந்திருந்தார். அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தபோது நம்பரை ஏரியில் இருந்து மண் கடத்தப்படுவதாக ஏற்கனவே 2 முறை மனு கொடுத்துள்ளேன். ஜமாபந்தியிலும் ஒருமுறை மனுகொடுத்துவிட்டேன்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? அல்லது மனுக்கள் குப்பைக்கூடைக்கு போகிறதா? என்று கேட்டு கலெக்டர் முன்பிருந்த மேசையின் மீது தட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த கலெக்டர் ராமன், மாற்றுத்திறனாளியான ராமதாஸ் மற்றும் அவருடன் வந்திருந்த சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு வந்தனர். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தியும் வந்தார். அவர்கள் ராமதாஸ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆற்காடு தாலுகா கெங்கனாவரம் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். குப்பத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் கொடுத்துள்ள மனுவில் தங்கள் குழந்தைகளும் மற்ற சமுதாயத்தை போன்று கல்வியில் முன்னேறவும், குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம் போன்ற மூடப்பழக்கங்களில் இருந்து விடுபட தனியாக உண்டு உறைவிட பள்ளி தொடங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

கண்டியாங்குப்பம் காலனியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் கொடுத்துள்ள மனுவில் எங்கள் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டா திரும்ப பெறப்பட்டது. பின்னர் அவர்களில் 60 பேருக்கு மட்டும் மீண்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 36 பேருக்கு பட்டா வழங்கப்படவில்லை. விடுபட்ட 36 பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Next Story