மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற கருவூலத்துறை ஊழியர் மனைவியிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்பு


மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற கருவூலத்துறை ஊழியர் மனைவியிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2018 10:30 PM GMT (Updated: 11 Jun 2018 8:45 PM GMT)

தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கருவூலத்துறை ஊழியரின் மனைவியிடம் 6½ பவுன் சங்கிலியை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கருவூலத்துறை ஊழியரின் மனைவியிடம் 6½ பவுன் சங்கிலியை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

தேவதானப்பட்டி மேல்மந்தை தெருவை சேர்ந்தவர் குமாரசெல்வன் (வயது 52). இவர், தேனி கருவூல அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுசிலா (42). குமாரசெல்வன் நேற்று முன்தினம் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டுவுக்கு சென்றார். அங்கு ஜவுளி எடுத்துவிட்டு, தேவதானப்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

காட்ரோடு முனீஸ்வரர் கோவில் அருகில் வந்த போது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென அதில் பின்னால் அமர்ந்து வந்த நபர், சுசிலா கழுத்தில் அணிந்து இருந்த 6½ பவுன் சங்கிலியை பறித்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த சுசிலா நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அந்த மர்ம நபர்கள் 2 பேரும் தங்க சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

கீழே விழுந்ததில் சுசிலாவுக்கு உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருந்தன. மேலும், மர்மநபர்கள் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை குறித்துக் கொண்ட குமாரசெல்வன் இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டு இருந்தது போலி பதிவு எண் என்பது தெரியவந்தது. தப்பிச் சென்ற மர்ம நபர்கள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேவதானப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story