குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்


குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:45 PM GMT (Updated: 11 Jun 2018 8:55 PM GMT)

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனுக்கள் அளித்தனர். மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மனு அளிக்க பெரியகுளம் அருகே உள்ள ஏ.வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்தனர். அவர்களில் சிலர் காலிக்குடங்களை எடுத்து வந்தனர். கலெக்டரிடம் அவர்கள் அளித்த மனுவில், ‘எங்கள் ஊருக்கு குடிநீர், சாலை வசதி, பொதுக்கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தும் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தோட்டங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்துகிறோம். எனவே, எங்கள் கிராமத்துக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் கஷ்டப்படுகிறோம். குடங்களை எடுத்துக் கொண்டு தோட்டம், தோட்டமாக அலைந்து தண்ணீர் பிடித்து வருகிறோம். எனவே குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் எங்கள் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

சீர்மரபினர் நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘6-ம் வகுப்பு தமிழ் பாடத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்க்கை வரலாறு இடம் பெற்று இருந்தது. தற்போது புதிய பாடப்புத்தகத்தில் முத்துராமலிங்கத்தேவர் வரலாறு அகற்றப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான அனைவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மீண்டும் 6-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் முத்துராமலிங்கத்தேவர் வாழ்க்கை வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு 15 ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர். தற்போது அந்த இடத்தை அவர்களே பராமரித்து வருகின்றனர். எனவே, அங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘கடமலைக்குண்டு வருவாய் கிராமத்தில் கடந்த ஒராண்டு காலமாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உடனே இந்த காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். கடமலைக்குண்டு ஊராட்சியில் சேரும் குப்பைகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில், கிராமத்தில் உள்ள உப்போடையில் கொட்டப்படுகிறது. ஓடையில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஓடையில் குப்பைகளை கொட்டாமல், மாற்று இடத்தில் கொட்டி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

டொம்புச்சேரியை சேர்ந்த வள்ளலார் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் வனராஜன் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘டொம்புச்சேரியில் உள்ள மயானத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. தண்ணீர், மின்விளக்கு, சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

Next Story