அடிப்படை வசதி இல்லாத அம்பாத்துரை ரெயில்நிலையம் சாய்வு தள பாதை அடைக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளிகள் அவதி
அடிப்படை வசதிகள் இன்றி அம்பாத்துரை ரெயில் நிலையம் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் செல்லும் சாய்வு தள பாதையும் அடைக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
சின்னாளபட்டி
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் ரெயில் மார்க்கத்தில் திண்டுக்கல்லை அடுத்து அம்பாத்துரை ரெயில் நிலையம் உள்ளது. இங்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 15-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கிறது. காந்திகிராம பல்கலைக்கழக ஊழியர்கள், சின்னாளபட்டி ஜவுளி வர்த்தகர்கள், சின்னாளபட்டியை சுற்றியுள்ள ஏராளமான கிராமப்புற விவசாயிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இந்த ரெயில் நிலையம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மேலும் அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் கணினி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் மையமும் செயல்படுகிறது. ரெயில்களில் வெளியூர்களுக்கு செல்லவும், வெளியூர்களில் இருந்து வந்து இறங்கவும் அதிகளவு கூட்டம் எப்போதும் இருக்கும். இதனால் இந்த ரெயில் நிலையம் எப்போது பரப்பரப்பாகவே காணப்படும்.
பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ள அம்பாத்துரை ரெயில்நிலையத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீர், கழிப்பறை, நிழற்குடை வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும், அவை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அனைத்து இடங்களிலும் குடிநீருக்கான குழாய்கள் உள்ளது.
ஆனால் குழாய்களை திறந்து பார்த்தால் தண்ணீர் வருவதில்லை. நவீன கழிப்பறைகள் 2 கட்டப்பட்டு உள்ளது. ஆனால் கட்டப்பட்ட நாளில் இருந்து திறக்கப்படவே இல்லை. இதனால் ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட கழிப்பறைகளும் திறக்கப்படவே இல்லை.
இதற்கும் மேல் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்வு தள பாதை அமைக்கப்பட்டு, பிடித்து செல்ல கிரில் அமைக்கப்பட்டது. ஆனால் சாய்வு தள பாதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத அளவு அந்த இடத்தில் மின் பகிர்மான பெட்டியை அமைத்துள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை முற்றிலுமாக அடைக் கப்பட்டு உள்ளது.
எனவே அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் தேவையான குடிநீர், கழிப்பறை அடிப்படை வசதிகளை செய்து தர ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story