ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டி.ஜி.வினய் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் 36 ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவ, மாணவி விடுதிகள், 1 துப்புரவு பணியாளரின் பள்ளி மாணவர் விடுதி, 4 கல்லூரி மாணவ-மாணவி விடுதிகள், 4 பழங்குடியினர் மாணவர் விடுதிகள், 6 பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி விடுதிகள் உள்ளன.
இந்த விடுதிகளில் 2018-2019-ம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்கி உள்ளது. எனவே, 4-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் பள்ளி மாணவர்கள், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேரலாம். இதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடியிருப்பில் இருந்து விடுதிக்கு 8 கி.மீ. தூரம் இருக்க வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறை தனித்தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தில் புகைப்படத்தை ஒட்டி, பூர்த்தி செய்து பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்று, சாதிச்சான்று, வருமானச்சான்று, ரேஷன்கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் பள்ளி மாணவர்கள் வருகிற 20-ந்தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந்தேதிக்குள்ளும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு விடுதிகளிலும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள் 5 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகளில் சேர்ந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story