நீச்சல் பழகிய பெண் கிணற்றில் மூழ்கி சாவு 10 மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு


நீச்சல் பழகிய பெண் கிணற்றில் மூழ்கி சாவு 10 மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 9:41 PM GMT)

வெண்ணந்தூர் அருகே நீச்சல் பழகிய பெண் கிணற்றில் மூழ்கி இறந்தார். 10 மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்கப்பட்டது.

வெண்ணந்தூர்,

சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் சுப்பராயன். இவருடைய மனைவி கோகிலா (வயது 23). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது உறவினர் வீடு நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த புரசல்பட்டியில் உள்ளது. அங்கு சென்ற இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மதியம் அக்கரைப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனியப்பன் கோவில் அருகில் நடேசன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீச்சல் பழகுவதற்கு சென்றுள்ளனர்.

இவர்களுடன் புரசல்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளும் சென்றனர். கோகிலா கிணற்றின் ஆழம் குறைவாக இருக்கும் என கருதி குதித்துள்ளார். ஆனால் தண்ணீருக்குள் சென்ற அவர் பின்னர் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சுப்பராயன் கூச்சலிட்டுள்ளார்.

இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து கோகிலாவை காப்பாற்ற முயற்சித்து உள்ளனர். ஆனால் முடியவில்லை. இதுபற்றி ராசிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் மாலை 4 மணியளவில் வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து கோகிலாவை மீட்க முயற்சித்தனர். ஆனால் 45 அடி ஆழ கிணற்றில் முழுவதும் தண்ணீர் நிரம்பியிருந்ததால் அவர்களாலும் உடனடியாக கோகிலாவை மீட்க முடியவில்லை.

பின்னர் மின்மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டதோடு, கோகிலாவை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் கிணற்றில் தண்ணீர் அதிகம் இருந்ததால் கோகிலா எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. இதனால் கிணற்றுக்குள் புகைப்பட கருவி மூலம் கோகிலா எங்கு உள்ளார் என்று தேடப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. இதனால் மின்மோட்டார் மூலம் மீண்டும் தண்ணீரை வெளியேற்றினர்.

இந்த நிலையில் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கிணற்றில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட பிறகு கோகிலா பிணமாக மீட்கப்பட்டார்.

பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சுப்பராயன் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story