மூச்சு திணறல் ஏற்பட்டு காருக்குள்ளே மயங்கினார்: நடுரோட்டில் நின்ற கார் கண்ணாடியை உடைத்து டாக்டர் மீட்பு


மூச்சு திணறல் ஏற்பட்டு காருக்குள்ளே மயங்கினார்: நடுரோட்டில் நின்ற கார் கண்ணாடியை உடைத்து டாக்டர் மீட்பு
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 9:42 PM GMT)

நாகர்கோவிலில் ஓடும் காரில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு டாக்டர் மயங்கினார். தீயணைப்பு வீரர்கள் கார் கண்ணாடியை உடைத்து டாக்டரை மீட்டனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஒழுகினசேரி முத்து தியேட்டர் முன் நேற்று மதியம் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென நடுரோட்டில் நின்றது. வெகு நேரம் ஆகியும் அந்த கார் நடுரோட்டை விட்டு செல்லவில்லை. இதனால் பிற வாகனங்கள் செல்ல இயலாத நிலை உருவாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் நடுரோட்டில் நின்ற காரின் அருகே வந்து ஓட்டுனரை பார்த்தனர். கார் கண்ணாடிகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது. கதவுகளும் லாக் செய்யப்பட்டு இருந்தன. இதனால் கார் கதவுகளை அடைத்துவிட்டு ஓட்டுனர் தூங்கி விட்டாரோ? என்று நினைத்த மக்கள் ஒன்று கூடி உடனே அந்த காரின் கண்ணாடியை தட்டி ஓட்டுனரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழும்பாததால் சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதன்பிறகு கார் கண்ணாடியை உடைத்து பார்த்த போது ஓட்டுனர் மயங்கி கிடந்தது தெரியவந்தது.

உடனே அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஓட்டுனர் குறித்து விசாரித்தபோது அவர், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி பகுதியை சேர்ந்த செல்லகண்ணன் என்பதும், அவர் ஒரு டாக்டர் என்பதும் தெரியவந்தது. அதன் பின்னர் ஆஸ்பத்திரியில் செல்லகண்ணனை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது செல்லகண்ணனுக்கு காரில் வந்து கொண்டு இருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மயங்கியதும் தெரியவந்தது.

ஆனால் மூச்சு திணறல் ஏற்பட்டபோதும் டாக்டர் செல்லகண்ணன் காரை லாவகமாக நிறுத்தியிருக்கிறார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து செல்லகண்ணனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரின் உறவினர்களை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story