மருத்துவ படிப்புக்கான சென்டாக் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்கவேண்டும் - பாரதீய ஜனதா வலியுறுத்தல்


மருத்துவ படிப்புக்கான சென்டாக் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்கவேண்டும் - பாரதீய ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jun 2018 5:00 AM IST (Updated: 12 Jun 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்புக்கான சென்டாக் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் சென்டாக் மருத்துவ கலந்தாய்வுக்கு இந்த முறை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதை கொண்டு வந்துள்ளனர். இது பாராட்டத்தக்கது. இதற்கான பதிவு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. ஆனால் பல்வேறு குழப்பங்கள் இதில் ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கு 10, 12-ம் வகுப்பு படித்த மதிப்பெண் பட்டியல் மட்டுமே போதும் என்ற அடிப்படையில் ஆன்லைன் பதிவு இருந்தது. பிறகு மதிப்பெண் பட்டியலின் பதிவு எண் இருக்கவேண்டும் என்று விண்ணப்பிக்கும் முறை மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் மதிப்பெண் சான்றிதழின் பதிவு எண்ணை பதிவு செய்ய முடியவில்லை. இதைப்போன்று பல குழப்பங்கள் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்கும் முறையில் உள்ளது.

எனவே ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். அல்லது இந்த ஆண்டு ஆன்லைன் முறை கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு, வரும் கல்வி ஆண்டுகளில் முறையாக அனைத்தையும் சரிசெய்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து ஆன்லைன் முறையை கொண்டு வர வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவ கல்லூரிகளில் புதுவை அரசு இடஒதுக்கீடாக 283 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை இடங்கள் பெறப்பட்டது. ஆனால் கடந்த வருடம் அது 165 இடங்களாக குறைந்துவிட்டது. இந்த வருடம் இன்னும் குறையும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இப்போது தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் பேரம்பேசி இடங்களை விட்டுக்கொடுத்துள்ளனர். முறைகேடுகள் காரணமாக புதுவை மாணவர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கவில்லை. இந்தியா முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் கல்விக்கட்டணமாக ரூ.30 ஆயிரத்துக்கு மேல் எங்கும் வசூலிக்கவில்லை. ஆனால் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.1 லட்சத்து 37 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story