சொத்தை பிரித்து கேட்டதால் மண்வெட்டியால் அடித்து மகன் கொலை; விவசாயி கைது


சொத்தை பிரித்து கேட்டதால் மண்வெட்டியால் அடித்து மகன் கொலை; விவசாயி கைது
x
தினத்தந்தி 12 Jun 2018 3:59 AM IST (Updated: 12 Jun 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலத்தில், சொத்தை பிரித்துகேட்டதால் மகனை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

தாரமங்கலம்,

சொத்தை பிரித்து கேட்டதால் மண்வெட்டியால் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் தாரமங்கலம் 17-வது வார்டு கீழ் சின்னாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி தொப்பையம்மாள் (55).

இவர்களுக்கு ஆண்டியப்பன் (38), சின்னதுரை (36), பொன்னுமணி (28) ஆகிய 3 மகன்களும், சித்தம்மாள் (45), பாப்பு (37), பாப்பா (35) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. பொன்னுசாமியின் வீடு மற்றும் மகன்களின் வீடுகள் ஒரே பகுதியில் உள்ளன. பொன்னுமணியின் மனைவி பிரியா (25). திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பவித்ரா (5), வெற்றிவேல் (1) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். பொன்னுமணிக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் பிரியா கணவனை பிரிந்து சித்தனூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார்.

பொன்னுசாமிக்கு ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதை தனது பெயருக்கு மாற்றித்தரும்படி பொன்னுமணி தனது தந்தையிடம் கேட்டு தகராறு செய்து வந்தார். அதற்கு பொன்னுசாமி, 3 மகன்கள் உள்ளனர். அதில் உனக்கு மட்டும் எப்படி நிலத்தை பிரித்து தர முடியும்?. நிலத்தை பிரித்துக் கொடுத்தால் குடித்தே அழித்து விடுவாய். மனைவி, குழந்தைகள் வறுமையில் வாடுவார்கள், எனக்கூறி நிலத்தை பிரித்துக்கொடுக்க மறுத்து விட்டார். இதனால் பொன்னுமணி ஆத்திரம் அடைந்தார்.

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பொன்னுமணி குடிபோதையில் கொடுவாளுடன் தந்தை பொன்னுசாமி வீட்டுக்கு வந்தார். அங்கிருந்த பொன்னுசாமியை அவர் கொடுவாளுடன் விரட்டினார். இதைப் பார்த்து பயந்துபோன பொன்னுசாமி பக்கத்துக்கு வீட்டுக்குள் சென்று பதுங்கிக் கொண்டார். இதனால் பொன்னுமணி அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில், மகன் கொடுவாளுடன் தன்னை விரட்டியதை நினைத்த பொன்னுசாமி அதிர்ச்சி அடைந்தார். அவனை விட்டு வைத்தால் தன்னை தீர்த்து கட்டி விடுவான் என்று கருதிய பொன்னுசாமி நள்ளிரவு 1 மணியளவில் மண்வெட்டியுடன் பொன்னுமணியின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக தூங்கிக்கொண்டு இருந்த அவரை பொன்னுசாமி மண்வெட்டியால் சரமாரியாக அடித்தார். இதனால் வலிதாங்க முடியாமல் பொன்னுமணி அலறினார். அவருடைய அலறல் சத்தத்தை கேட்டதும் பொன்னுமணியின் அண்ணன்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் பொன்னுமணி பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜ் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் உத்தரவின்பேரில் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து போலீசார், பொன்னுமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பொன்னுசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story