அந்தியூர் அருகே 2 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை


அந்தியூர் அருகே 2 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
x
தினத்தந்தி 12 Jun 2018 6:00 AM IST (Updated: 12 Jun 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே குடும்ப தகராறில் 2 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் அருகே உள்ள ஊசிமலையை சேர்ந்தவர் மாதேஸ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சிவகாமி (வயது 26). இவர்களுக்கு தியாகீசன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாதேசுக்கும், சிவகாமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாதேசிடம் கோபித்துக்கொண்டு அந்தியூர் அருகே சமயதாரனூரில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு தியாகீசனுடன் சிவகாமி வந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிவகாமியின் தம்பி முருகேசனுக்கு திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து கணவருடன் சேர்ந்து வாழுமாறு சிவகாமியை அவருடைய பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை சிவகாமியின் தாய் கெம்பாள் அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அவரின் அருகில் தியாகீசன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த சிவகாமி, விளையாடிக்கொண்டிருந்த தியாகீசனை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு சென்றார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கெம்பாள் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் சிவகாமியும், தியாகீசனும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை கெம்பாள் தேடினார். அப்போது வீட்டின் அருகில் பள்ளத்து தோட்டம் பகுதியில் உள்ள 10 அடி ஆழ கிணற்றில் சிவகாமியும், தியாகீசனும் பிணமாக மிதந்தை கண்டு கதறி அழுதார். இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ‘கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த சிவகாமி, தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது,’ தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story