கச்சநத்தம் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் கி.வீரமணி பேட்டி


கச்சநத்தம் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 12 Jun 2018 4:55 AM IST (Updated: 12 Jun 2018 4:55 AM IST)
t-max-icont-min-icon

கச்சநத்தம் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கி.வீரமணி பேட்டி அளித்துள்ளார்.

மானாமதுரை,

திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த மாதம் 28–ந்தேதி கோவில் திருவிழாவையொட்டி ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு கும்பல் வீடு, வீடாய் நுழைந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டினர். இந்த வன்முறை சம்பவத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த மோதல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கச்சநத்தம் கிராமத்திற்கு வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கச்சநத்தம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் போன்று பல இடங்களில் நடைபெறுகிறது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள், கிராமமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை அரசு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்ற பின் நடவடிக்கை எடுப்பதை விட முன்எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரியார் அறக்கட்டளை மூலம் உதவி செய்ய வேண்டும் என்றார்.


Next Story