பழுதாகி நடுவழியில் நிற்கின்றன: பராமரிப்பு இல்லாத அரசு பஸ்களால் பயணிகள் அவதி


பழுதாகி நடுவழியில் நிற்கின்றன: பராமரிப்பு இல்லாத அரசு பஸ்களால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 11 Jun 2018 11:26 PM GMT (Updated: 11 Jun 2018 11:26 PM GMT)

மதுரை–ராமேசுவரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் பராமரிப்பின்றி அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்கின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரை,

மதுரையில் இருந்து சுற்றுலா தலமான ராமேசுவரத்திற்கு தினசரி 500–க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் சென்று வருகின்றன. பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகள் பாம்பன் பாலத்தில் நின்று கடலின் அழகை ரசிக்க வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அரசு பஸ்களை நம்பியே உள்ளனர். கோவை, கம்பம், குமுளி, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் மதுரை வழியாக ராமேசுவரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நீண்ட தூரத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் பலவும் பராமரிப்பின்றியே இயக்கப்படுகின்றன.

தரமில்லாத டயர்கள், சேதமடைந்த பயணிகள் இருக்கை, ஆபத்தை விளைவிக்கும் வகையில் நீட்டி கொண்டிருக்கும் கம்பிகள் என பல வகையிலும் அரசு பஸ்கள் பயணிகளை பரிதவிக்கவிட்டு வருகின்றன. நீண்டதூர பஸ்களில் டயர் பஞ்சரானால் மாற்றுவதற்கு மாற்று டயர், மாற்றுவதற்கு உரிய உபகரணங்கள் எதுவும் இருப்பதில்லை. இதனால் அந்த பஸ்களை நம்பி பயணம் செய்யும் முதியோர்கள், பெண்கள் நடுவழியில் பரிதவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று கம்பத்தில் இருந்து ராமேசுவரம் சென்ற அரசு பஸ் ஒன்று, முத்தனேந்தல் அருகே டயர் பஞ்சராகி நடுவழியில் நின்றுபோனது. மாற்று டயர் இருந்தும், டயர் மாற்ற தேவையான் உபகரணங்கள் இல்லாததால் உடனடியாக பஞ்சரை சரிசெய்ய முடியவில்லை. இதனால் அதில் வந்த பயணிகளை மற்றொரு பஸ்சில் கண்டக்டர் ஏற்றி அனுப்பிவிட்டார். இருப்பினும் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வந்த வியாபாரிகள், சரக்குகளை வேறு பஸ்களுக்கு மாற்ற முடியாமல் அவதிப்பட்டனர். எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நீண்டதூர பயணத்திற்கு தரமான பஸ்களை இயக்க வேண்டும் என்றும், போதிய அளவு பஸ்களை பராமரிக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story