திருச்சுழி பகுதியில் நிலக்கடலை பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


திருச்சுழி பகுதியில் நிலக்கடலை பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2018 11:36 PM GMT (Updated: 11 Jun 2018 11:36 PM GMT)

திருச்சுழி பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு நிலக்கடலை பயிருக்கான இழப்பீட்டுத்தொகை வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

விருதுநகர்,

திருச்சுழி தாலுகாவில் உள்ள குறவைகுளம் கிராம விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

திருச்சுழி தாலுகாவில் உள்ள பனைக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக கடந்த 2016–17 பசலி ஆண்டிற்கு ராபி பருவத்துக்கு நிலக்கடலை பயிருக்கு காப்பீட்டுத்தொகைக்கு பதிவு செய்து இருந்தோம். இதில் அதே வங்கி மூலமாக இலுப்பைக்குளம், பனைக்குடி, கண்டுகொண்டான்மாணிக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிலக்கடலை பயிருக்கான இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் எங்கள் கிராம விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நரிக்குடி யூனியனை சேர்ந்த அழகாபுரி, சிறுவனூர், வாகைக்குளம், புதுக்குளம், அருணாகிரி, கட்டலாக்குளம் ஆகிய கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

நாங்கள் அழகாபுரியில் உள்ள தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கியில் நிலக்கடலைப்பயிருக்கு காப்பீட்டுத்திட்டம் பதிவு செய்து இருந்தோம். எங்களுக்கு கடலை சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு விதை ரூ.3 ஆயிரம், உழவு கூலி ரூ.1,700 செலவாகி உள்ளது. மற்ற கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 3,500 வீதம் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு ஏக்கருக்கு ரூ.350 மட்டுமே தருவோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் அந்த தொகையை வாங்கவில்லை. எனவே எங்களுக்கு தகுந்த பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story