கொலை மிரட்டல் கடிதத்தை வைத்து பா.ஜனதா அனுதாபம் தேடுகிறது சரத்பவார் கடும் தாக்கு


கொலை மிரட்டல் கடிதத்தை வைத்து பா.ஜனதா அனுதாபம் தேடுகிறது சரத்பவார் கடும் தாக்கு
x
தினத்தந்தி 12 Jun 2018 5:14 AM IST (Updated: 12 Jun 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் ஆதரவை இழந்து விட்டதால் கொலை மிரட்டல் கடிதத்தை வைத்து பா.ஜனதா அனுதாபம் தேடுவதாக சரத்பவார் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

மும்பை,

புனே அருகே உள்ள பீமா- கோரேகாவ் வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரில் ஒருவரான ரோனா வில்சன் என்பவரின் டெல்லி வீட்டில் சோதனை நடத் தியபோது, அங்கு மாவோயிஸ்டு ஒருவரின் கடிதம் சிக்கியது.

இந்த கடிதத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும் மாவோயிஸ் டுகளிடம் இருந்து கொலை மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இதையடுத்து இருவருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.

இந்த நிலையில் புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், கொலை மிரட்டல் கடிதம் குறித்து கடுமையாக தாக்கி பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது.

மக்களின் ஆதரவை இழந்து வருவதை பா.ஜனதா அரசு உணர்ந்துள்ளது. இதனால் தான் அக்கட்சியினர் மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக கொலை மிரட்டல் கடிதத்தை வைத்து விளையாடிக் கொண்டு இருக் கின்றனர். இது போன்ற சூழ்ச்சி களால் மக்களை வீழ்த்த முடியாது என்பதில் நான் மிகவும் உறுதியாக உள்ளேன்.

நான் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இது குறித்து பேசினேன். இத்தகைய கடிதம் எதுவும் கிடைத்தால் உடனடியாக ஊடகங்களுக்கு சொல்லாமல், பாதுகாப்பை பலப்படுத்துவது தான் வழக்கம் என்று அவர் தெரிவித்தார். இவ்வாறு சரத்பவார் பேசினார்.

சரத்பவாரின் பேச்சுக்கு வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சுடச்சுட டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், “சரத்பவார் இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு செல்வார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. நரேந்திர மோடி ஒரு நாட்டின் தலைவர். ஒரு கட்சிக்கான தலைவர் கிடையாது. கொலை சதி குறித்து போலீசாரிடம் சாட்சியங்கள் உள்ளது. உண்மை கண்டிப்பாக வெளிவரும் ” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு மராத்தி பதிவில், “நீங்கள் (சரத்பவார்) தேசத்திற்கான அரசியலில் ஈடுபடுங்கள், வெறுப்பு அரசியல் வேண்டாம்” என தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே சிவசேனாவின் அதிகாரப் பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத் திலும் இதுகுறித்து விமர்சனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், “கொலை மிரட்டல் கடிதம் மிகவும் மர்மமாகவும், ஏதோ பேய் படத்தின் கதையை கேட்பது போலவும் உள்ளது.

பிரதமர் மோடி தலைமை யிலான பா.ஜனதா 15 மாநிலங்களில் அரசை நிறுவியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நம் இயக் கத்தை நடத்துவது கடினம். எனவே அவரை கொல்ல வேண்டும் என்று கைதான நபர் எழுதியிருப்பதாக போலீசார் சொல்வதை கேட்கும் போது சிரிப்பு வருகிறது. இந்த கடிதத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

Next Story