மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2018 12:19 AM GMT (Updated: 12 Jun 2018 12:19 AM GMT)

கும்மிடிப்பூண்டி பஜாரில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி பஜாரில் தபால் அலுவலகம், மார்க்கெட், பஸ் நிறுத்தம், அரசு பள்ளி மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிதாக மதுக்கடை திறக்கப்படஉள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த கடை வாசலில் மது குடிக்க ஏதுவாக பிளாஸ்டிக் துணியால் தடுப்பும் நேற்று அமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே அந்த பகுதி மக்கள் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் போலீசாருக்கு கடந்த வாரம் மனு அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் கடை முன்பு, மதுபிரியர்கள் மது குடிக்க வசதியாக மறைப்புக்கான தடுப்பு துணி கட்டப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பெண்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 100 பேர், புதிதாக திறக்கப்பட உள்ள அந்த மதுக்கடை முன்பு நேற்று கும்மிடிப்பூண்டி அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் கேசவன் தலைமையில் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், கிராம நிர்வாக அதிகாரி பாக்கிய சர்மா மற்றும் போலீஸ் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கு ஆய்வு நடத்திய தாசில்தார் ராஜகோபால், பொதுமக்களுக்கு இடையூறாக கருதப்படும் அந்த இடத்தில் மதுக்கடை ஒருபோதும் திறக்கப்படாது என்று உறுதி அளித்தார். மேலும் அதற்கான உத்தரவை ரத்து செய்து, வேறு இடத்தில் கடையை அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் தாசில்தாருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

அதன்பிறகு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story