திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2018 5:52 AM IST (Updated: 12 Jun 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் பகுதியில் தனியார் கம்பெனியின் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் தலைமையில் வக்கீல் பிரிவு தலைவர் கிருஷ்ணராஜ், கிராம நிர்வாகிகள் சரவணன், ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் சாலையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது.

கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் நேதாஜி தெருவில் குடியிருப்புக்கு மத்தியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது.

இங்கு செல்போன் கோபுரம் அமைப்பதால் கதிர்வீச்சால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே இங்கு செல்போன் கோபுரத்தை அமைக்க கூடாது, எங்கள் கிராமத்தில் குடியிருப்புகள் இல்லாத வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இது குறித்து நாங்கள் செவ்வாப்பேட்டை போலீசிலும் புகார் அளித்தோம். ஆனால் தற்போது மீண்டும் அதே இடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான தளவாடப்பொருட்களை கொண்டு வந்து இறக்கி, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுபற்றி நாங்கள் கேட்டபோது, அங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் எங்களை தகாத வார்த்தையால் மிரட்டல் தொணியில் பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக நாங்கள் ஆர்.டி.ஓ., தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே குடியிருப்புக்கு மத்தியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட அவர்களை, போலீசார் சமரசம் செய்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்ட அவர்கள், தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுவை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story